திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடைவிதிக்கப்பட்டதால் பக்தர்களின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.
கொரோனா ஊரடங்கால் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 6 மணிக்கு நிறைவடைகிறது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கிரிவலம் செல்ல வந்த பக்தர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இருப்பினும் சிலர் மாற்றுத் பாதையில் கிரிவலப்பாதைக்கு வந்து தனித் தனியாக வந்து தங்களது கிரிவலத்தை தொடர்ந்தனர்.
மேலும் கிரிவலப்பாதையில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்கள் தங்களது அடையாள அட்டையை போலீசாரிடம் காண்பித்து சென்றனர். பக்தர்கள் கூட்டமின்றி கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார் தொடர்ந்து கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு ஒவ்வொரு பவுர்ணமிக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனால் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரம் முழுவதும் பல்வேறு தரை கடைகள் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதனால் திருவண்ணாமலையில் சிறிய முதல் பெரிய கடைகள் வரையில் வியாபாரம் பரவலாக நடைபெறும். பவுர்ணமி கிரிவலத்திற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் அனைத்துத் தரப்பு வியாபாரிகளும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பலர் வேதனை தெரிவித்தனர்.