அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது.
பிருங்கி முனிவர் அருணாசலேஸ்வரரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது வண்டு உருவில் மாறி அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம். இது மனித வாழ்வில் கணவன்-மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.
இந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நடக்கும். இந்த திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். வழக்கமாக சாமி குமரக்கோவிலுக்கு செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை கருத்தில் கொண்டு நேற்று கிரிவலம் வர வேண்டிய அருணாசலேஸ்வரர் திருவூடல் விழா நிறைவடைந்ததும் நேற்று முன்தினமே மலையை சுற்றி கிரிவலம் சென்றார். பின்னர் ராஜகோபுரத்தின் அருகில் உள்ள முருகர் சன்னதியில் எழுந்தருளினார்.
இந்த நிலையில் நேற்று கோவிலில் மறுவூடல் விழா நடந்தது. முன்னதாக அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சாமி மேளதாளங்கள் முழுங்க அங்கிருந்து அவரது சன்னதியில் எழுந்தருளினார். நேற்று முன்தினம் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு வந்த அம்மன் சாமி சன்னதியில் உற்சவ மூர்த்தி சன்னதியில் கதவை மூடி இருப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அருணாசலேஸ்வரர் உற்சவ மூர்த்தி சன்னதியின் முன்பு மேள தாளங்கள் முழங்க முன்னும், பின்னும் 3 முறை ஆடியபடி வந்து ஊடல் செய்து, சாமி அம்மனுடன் இணைவது போன்று மறுவூடல் விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் ஓதுவார் சாமியின் முன்பு திருவூடல் மற்றும் மறுவூடல் விழாவின் கதையை பாடி காணப்பித்தார்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதில் கோவில் பணியாளர்களும், சிவாச்சாரியார்களும், உபயதாரர்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.