வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தேவார பதிகங்களை பாடி திருக்கதவு திறக்கும் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று கோவில் திருக்கதவை தேவார பதிகங்கள் பாடி திறக்கும் உற்சவம் நடந்தது.
இதை முன்னிட்டு அப்பரும், சம்பந்தரும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தேவார பதிகங்கள் பாடப்பட்டன.
வெளிப்பிரகார உலா சாமி சன்னதியில் உள்ள கொடி மரம் முன்பு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து கோவில் திருக்கதவுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தேவார பதிகங்களை பாடியபடி கதவு திறக்கப்பட்டது.
அப்பராக ராஜேந்திர ஓதுவாரும், சம்பந்தராக கோவில் ஓதுவார் பரஞ்சோதி ஓதுவாரும் உருவகப்படுத்தப்பட்டு தேவார பதிகங்களை பாடினர். ஓதுவார் முத்துக்குமாரசுவாமி தேசிகர் இந்த நிகழ்வு குறித்து பக்தர்களுக்கு விளக்கினார். இதில் யாழ்ப்பாணம் பரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, குருகுலம் அறங்காவலர் குழு தலைவர் வேதரத்தினம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.