மனக்குழப்பத்தில் இருந்தும் மனோபயத்தில் இருந்து நம்மை விடுவித்து, நமக்கு மனோதைரியத்தைத் தந்தருள்வார் மனோகாரகன் சந்திர பகவான்!
தஞ்சை, கும்பகோணம் முதலான ஊர்களைச் சுற்றி நவக்கிரகத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. நவக்கிரகங்களில் உள்ள செவ்வாய் பகவானுக்கு, தஞ்சையை அடுத்துள்ள திருக்கண்டியூருக்கு அருகில் திங்களூர் எனும் திருத்தலம் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் நவக்கிரக பரிகார திருத்தலங்களில், சந்திர பகவானுக்கு உரிய திருத்தலம் என்று போற்றப்படுகிறது.
திங்கட்கிழமைகளில் இந்தத் தலத்துக்கு வந்து வேண்டிக்கொள்வதும் தரிசித்துப் பிரார்த்தனை செய்வதும் விசேஷமானவை என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
மேலும் சந்திர பகவானின் தியான ஸ்லோகத்தையும் சந்திர பகவானுக்கு உரிய காயத்ரியையும் சொல்லி மனதார பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், நம் மனதை செம்மையாக்குவார் சந்திர பகவான். மனதை அமைதிப்படுத்துவார். ஆற்றுப்படுத்துவார். நிம்மதியை நிலைக்கச் செய்வார்.
மனதை செம்மையாக்கி, சீர்படுத்தி, அமைதி நிலைக்குக் கொண்டு வரும் சந்திர பகவானை மனதார வேண்டுவோம். அருகில் உள்ள ஆலயத்துக்குச் சென்று நவக்கிரகத்தில் உள்ள சந்திர பகவானை மனதார பிரார்த்தனை செய்யுங்கள். திங்கட்கிழமைகளில், நவக்கிரகத்தின் சந்திர பகவானை வேண்டுங்கள். எல்லா நலமும் வளமும் தந்தருளுவார் சந்திர பகவான்.