குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம்.
குருப்பெயர்ச்சி அன்று குரு பகவானை தரிசனம் செய்யத் தவறியவர்கள், ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் விரதம் இருந்து அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று, நவக்கிரகங்களில் உள்ள குரு பகவானை தரிசித்து வரலாம். வியாழக்கிழமையில் விரதம் இருந்து நீராடி, மஞ்சள் நிற ஆடை அணிந்து, புஷ்பராக மோதிரம் அணிந்து வழிபட வேண்டும்.
குரு பகவானுக்கு மஞ்சள் நிற ஆடையும், முல்லை மலர்களும் கொண்டு அர்ச்சனை, அலங்காரம் செய்ய வேண்டும். கடலைப்பொடி சாதம், வேர்க்கடலைச் சுண்டல், பருப்பு கலந்த இனிப்பு பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். பின்னர் அந்த நைவேத்தியப் பொருட்களை மற்றவர்களுக்கு தானம் செய்தல் அவசியம். மஞ்சள் நிற ஆடையையும் தானம் செய்யலாம். கடலை, சர்க்கரை கலந்து குருவுக்கு நைவேத்தியம் செய்து, அவற்றை சிறுவர்- சிறுமியர்களுக்கு தானம் செய்வது சிறப்பான பலனைத் தரும்.
சப்த குரு தரிசனம்
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்யநாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர். இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
* திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி தர்ப்பாசனத்தில் அமர்ந்து, சனகர், சனந்தகர், சனாதனர், சனத்குமாரர், சிவயோகமுனி, பதஞ்சலி, வியாக்ரபாதர், திருமூலர் என எட்டு முனிவர்களுக்கும் அருள்புரியும் கோலம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.