திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
மாலை 4.20 மணிக்கு சிம்மாசனத்தில் முருகப்பெருமான் அமர்ந்து தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளினார். இதே சமயம் போர்ப்படை தளபதியான வீரபாகு வந்தார். இதையடுத்து முருகப்பெருமானின் பிரதிநிதியாக கோவில் 2-வது ஸ்தானிகர் ரமேஷ் பட்டர் தனது கையில் வீரவாள் ஏந்தியபடி வந்தார். ரமேஷ் பட்டர் சூரசம்ஹார வரலாற்றை எடுத்து கூறினார்.
பின்னர் 5.5 மணிக்கு முருகப்பெருமான் தன் தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் பெற்ற சக்திவேலை கொண்டு சூரபத்மனை வதம் செய்தார். உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமிக்கும், தெய்வானைக்குமாக மாலை மாற்றி மகா தீப, தூப ஆராதனை நடந்தது. அவை கண் கொள்ளா காட்சியாக இருந்தது. சூரசம்ஹார லீலை நிகழ்ச்சியில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கிருபாகரன், புகேழந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று மாலை 4 மணியளவில் பாவாடை தரிசனம் நடக்கிறது.
சூரசம்ஹார லீலையில் முருகப்பெருமான் தங்க மயில் வாகனத்திலும், போர்ப்படை தளபதி வீரபாகு வெள்ளை குதிரை வாகனத்திலும் எழுந்தருளுவது வழக்கம். ஆனால் நேற்று அதற்கு மாறாக சிம்மாசனத்தில் முருகப்பெருமான் மற்றும் வீரபாகு எழுந்தருளினர். வழக்கமான பட்டாசு, வாண வேடிக்கைகள் இல்லை. கொரோனா காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பக்தர்கள் கோவில் வாசல் முன்பு திரண்டனர். அவர்கள் நெரிசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மாலை 6.30 மணிக்கு மேல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி கோவிலின் ஈசான திக்கில் கஜமுகா சூரனையும், அக்கினி திக்கில் சிங்கமுகாசுரனையும் சம்ஹாரம் செய்த பின்னர், ஸ்தல விருட்சமான நாவல் மரம் அருகில் பத்மா சூரனையும் சூரசம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடந்தது. விழாவில் இன்று காலையில் திருத்கல்யாண விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.