முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர்.
அதே போல் குமரி மாவட்டத்திலும் ஐயப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி கடலுக்கு அதிகாலை வந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடினார்கள். பின்னர் அவர்கள் கருப்பு மற்றும் நீல நிற உடை அணிந்து பரசுராமர் விநாயகர் கோவிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குரு சாமிகள் மற்ற சாமிகளுக்கு மாலை அணிவித்தனர். அப்போது அவர்கள் ‘சாமியே சரணம் ஐயப்பா‘ என்று பக்தி கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவிலுக்கு நேற்று காலை ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். இதேபோல் பார்வதிபுரம் ஐயப்பன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.
குமரி மாவட்டத்தில் 20 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களே அதிக அளவில் மாலை அணிந்ததை காணமுடிந்தது. இதுகுறித்து ஐயப்ப பக்தர்களிடம் கேட்டபோது, வழக்கமாக கார்த்திகை மாதம் விரதம் இருந்து சபரிமலைக்கு செல்ல வேண்டும். தற்போது கொரோனாவால் கேரள அரசு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் வயதில் மூத்தவர்கள், சிறுவர், சிறுமிகள் பெரும்பாலானோர் விரதத்தை மேற்கொள்ளவில்லை. இருப்பினும் நாங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி சாமியை தரிசனம் செய்வோம் என்றனர்.