மண்டல- மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மறுநாள் அதிகாலை முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். தொடர்ந்து 18-ம் படிக்குகீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்படும். அதன்பிறகு புதிய மேல்சாந்திகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடைபெறும்.
மாலை 6.30 மணிக்கு புதிய மேல்சாந்திகள், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மூல மந்திரம் சொல்லி பதவி ஏற்றுக்கொள்வார்கள். அதன்பிறகு 18-ம் படிக்குகீழ் காத்திருக்கும் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறாது. பக்தர்களின் தரிசனத்துக்கு பிறகு இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்படும். 17-ந் தேதி அதிகாலை முதல், புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்வார்.
17-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், தரிசனத்திற்கு வசதியாக கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்யப்படும்.
அடுத்த மாதம் 27-ந் தேதி மண்டல பூஜையும், வருகிற ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய பகுதிகளில் 5 கட்டமாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். பாதுகாப்பு பணிகளுக்கு இந்த ஆண்டு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்று கேரள டி.ஜி.பி. லோக்நாத் பெகரா தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வாகனங்கள் நிலக்கல் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். வாகனங்களை நிறுத்துவதற்கு நிலக்கல் பகுதியில் விசாலமான இடவசதி செய்யப்பட்டு உள்ளது. நிலக்கல்லில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் பம்பைக்கு இயக்கப்படும் என்றார்.
திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவராக இருந்த பத்மகுமார் மற்றும் உறுப்பினர் கெ.பி.சங்கரதாஸ் ஆகியோரது பதவி காலம் முடிவடைந்தது. புதிய தலைவர் மற்றும் உறுப்பினர் இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.
தலைவராக என்.வாசுவும், உறுப்பினராக கெ.எஸ்.ரவியும் பதவி ஏற்றுக்கொள்வார்கள். இந்த விழாவில் கேரள தேவஸ்தான மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் உட்பட பலத் கலந்து கொள்கிறார்கள்.