குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனி கொடை விழா கோலாகலமாக நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15-ந் தேதி மாலையில் பக்தி சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சி, இரவில் பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சின்ன சப்பரத்தில் நாராயண சுவாமி எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் சிகர நாளான நேற்று முன்தினம் ஆனி கொடை விழா நடந்தது. இதையொட்டி அம்மன் தங்க முக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை முதல் இரவு வரையிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் விநாயகர், அம்மன், பெரியசாமி, நாராயணர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவையொட்டி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் கோவைவாழ் குரங்கணி நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில், குமரன் தலைமையில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் விரதம் இருந்து கயிறு சுற்றி ஆடுதல், ஆயிரம் கண்பானை எடுத்தல், மாவிளக்கு பார்த்தல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வழிபட்டனர். பெரும்பாலானவர்கள் தங்களது உடலில் ஏற்படும் நோய்கள் தீர, அந்த உறுப்பின் மாதிரியை மரக்கட்டையால் செய்து நேர்த்திக்கடன் செலுத்தியும் வழிபட்டனர். இரவில் நாராயண சுவாமி பெரிய சப்பரத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.