திருமூலநகர் குருசுமலையில் மலைகுகை மாதா, புனித தோமையார் ஆலயம் திறப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு புனித ஜார்ஜியார் ஆலய அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.
விழாவுக்கு கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், சினிமா தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் தலைமை தாங்குகிறார். தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மைக்குரு வி.ஜி.பன்னீர்செல்வம், முதன்மை செயலாளர் நூர்பர்ட், வடக்கன்குளம் மறைவட்ட முதன்மை குரு ஜான் பிரிட்டோ ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். திருமூல நகர் குருசுமலை பங்குத்தந்தை பீட்டர் பாஸ்டின் வரவேற்று பேசுகிறார்.
விழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலயத்தை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். விழாவில் சினிமா டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அமீர், நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகைகள் சாஷி அகர்வால், மாஸ்டர் புகழ் பவி டீச்சர், மறைந்த வசந்தகுமார் எம்.பி.யின் மகன் விஜய் வசந்த் மற்றும் முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை குருசுமலை பங்குதந்தை பீட்டர் பாஸ்டின், கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார், திருமூலநகர் ஊர் மக்கள், பங்கு பேரவை நிர்வாகிகள் செய்துள்ளனர்.
கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவர் பி.டி.செல்வகுமார் ஏற்கனவே பொட்டல்குளம் அய்யன்மலையில் மூலிகை தியான மண்டபம் தனது சொந்த செலவில் கட்டிகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.