இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டிருந்த இலக்கு சாதாரணமானது இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டு பாவிகளாய் வாழ்பவர்களை நீதிமானாக மாற்றுவது.
இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டிருந்த இலக்கு சாதாரணமானது இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டு பாவிகளாய் வாழ்பவர்களை நீதிமானாக மாற்றுவது. ஒரு மாற்றத்தை மனிதகுலத்திற்கு தருவது. இந்த இலக்கை நிறைவேற்றி முடிக்கிற கடைசி ஆயத்த நேரம் அது.
ஒரு மனிதன் அதிக வேலை செய்யும்போது அவன் ரத்தத்திலிருந்து நீர் வியர்வையாக வெளியேறுகிறது, இது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு மனிதனிலிருந்து வியர்வை துளிகள் வராமல் ரத்தத்தின் பெருந்துளிகள் விழும் என்றால் அச்சரீரம் எவ்வளவான மன அழுத்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் என்று பாருங்கள். அது ஒரு பெண்ணின் பிரசவ வலியைவிட மிக மிக அதிகமானது. இந்த மனுகுலத்தை மீட்பதற்காக இயேசு அன்று மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். ரத்தம் சிந்தினார்.
எபிரேயர்: 9-28-ம் வசனம் இப்படி சொல்கிறது. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச்சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டு என்றும், எபிரேயர்: 10-10 இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச்சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் என்றும், எபிரேயர்: 10-20 அவருடைய ரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது. அவருடைய ரத்தம் நமக்கு பரிசுத்தத்தையும் தைரியத்தையும் தரும்படி நமது பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்திருக்கிறது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பிரியமானவர்களே! தேவன் (கடவுள்) மனிதனாய் பிறந்ததே ஒரு மகா அற்புதம் அதுவும் நம் பாவங்களை போக்கும் பலியாகவும் பரிகாரமாகவும் வந்தது அற்புதத்தின் அற்புதம். எனவே இந்த அற்புதத்தின் தேவனை ஆராதிக்க மறவாதிருப் போம். ஆமென்.
பாஸ்டர்.இ.டி.பாபு, திருப்பூர்.