கிரிக்கெட்

கெவின் ஓ பிரையன்

அயர்லாந்தின் 2011 உலக கோப்பை ஹீரோ சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்

Published On 2022-08-17 17:07 GMT   |   Update On 2022-08-17 17:07 GMT
  • உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கெவின் 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
  • அயர்லாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்ததாக கூறுகிறார் கெவின்

அயர்லாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரும் நம்பிக்கை நாயகனுமான கெவின் ஓ பிரையன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். 38 வயது நிரம்பிய கெவின் ஓ பிரைன், 153 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3619 ரன்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 1973 ரன்களும் அடித்துள்ளார். இதுதவிர ஒருநாள் போட்டிகளில் 114 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 58 விக்கெட்களையும் கைப்பற்றி உள்ளார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக அதிரடியாக ஆடிய கெவின், 50 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். அவரது இந்த அதிரடி சதமானது, உலக கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இன்றளவும் நீடிக்கிறது. அந்த போட்டியில் அயர்லாந்தை வெற்றி பெற வைத்தது அவரது மறக்க முடியாத ஆட்டங்களில் ஒன்றாகும்.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தின்போது நமிபியாவுக்கு எதிராக விளையாடியதே கெவின் ஆடிய கடைசி சர்வதேச அளவிலான போட்டியாகும். ஓபனிங்கில் தொடர்ந்து களமிறங்கி ஆடியபோதும் அவரால் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. அதன்பின்னர் அவர் அணியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார் கெவின் ஓ பிரையன். அயர்லாந்திற்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்ததாகவும், ஆடுகளத்திற்கு வெளியே பல நண்பர்களை உருவாக்கியதாகவும் அவர் கூறி உள்ளார். மேலும், தேசிய அணிக்காக விளையாடிய காலத்தில் பல மகிழ்ச்சியான நினைவுகள் உள்ளதாக கூறிய அவர், தனக்கு இதுநாள் வரை ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News