நவரசா ஆந்தாலஜியில் சர்ஜுன் இயக்கத்தில் அதர்வா, அஞ்சலி நடிப்பில் வெளியாகி இருக்கும் துணிந்த பின் படத்தின் விமர்சனம்.
நவரசா ஆந்தாலஜி - துணிந்த பின் விமர்சனம்
பதிவு: ஆகஸ்ட் 07, 2021 19:36 IST
நவரசா விமர்சனம்
அதர்வாவும், அஞ்சலியும் புதுமணத் தம்பதி. திருமணம் முடிந்த கையோடு ராணுவத்தில் சேர்கிறார் அதர்வா. அந்த சமயத்தில் ஒரு காட்டுப் பகுதியில் நக்சலைட்டுக்கு எதிராக ராணுவ வீரர்கள் சண்டையிடுகிறார்கள். அந்த குழுவில் புதிதாக ராணுவத்தில் சேர்ந்துள்ள அதர்வாவும் இருக்கிறார். அந்த சண்டையில் நக்சலைட் கும்பலைச் சேர்ந்த கிஷோர் பிடிபடுகிறார்.
அப்போது குண்டடிபட்ட நிலையில் இருக்கும் கிஷோரை மருத்துவமனைக்கு அதர்வா அழைத்து செல்லும் சூழல் உருவாகிறது. மருத்துவமனை 30கி.மீ அப்பால் உள்ளது. இந்த பயணத்தின் போது இருவரும் தொலைந்து போகின்றனர். அவர்களுக்கு என்ன ஆனது? இறுதியில் இருவரையும் கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அதர்வா, ராணுவ வீரராக நடித்துள்ளார். அதற்கேற்ற உடல்மொழியுடன் இருப்பதால் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் அதர்வா. நக்சலைட்டாக வரும் கிஷோர், தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். அஞ்சலி பெரிதாக காட்சிகள் இல்லாதது ஏமாற்றம் தான்.
வீரம் என்ற உணர்வை வைத்து 'துணிந்த பின்' என்ற கதையை இயக்கியுள்ளார் சர்ஜுன். படத்தில் சில புரட்சிகரமான விஷயங்கள் இருந்தாலும், வீரம் என்கிற உணர்வை சரியாக வெளிப்படுத்த முடியாமல் திணறி உள்ளது அப்பட்டமாக தெரிகிறது. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசையும், சுதர்ஷன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் அற்புதம்.
மொத்தத்தில் ‘துணிந்த பின்’ வேகமில்லை.