நவரசா ஆந்தாலஜியில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கெளதம் மேனன், பாபி சிம்ஹா நடிப்பில் வெளியாகி இருக்கும் அமைதி படத்தின் விமர்சனம்
நவரசா ஆந்தாலஜி - அமைதி விமர்சனம்
பதிவு: ஆகஸ்ட் 07, 2021 15:03 IST
நவரசா விமர்சனம்
ஈழத்தமிழர்களான கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் போர் சூழலில் எல்லையோரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர். அந்த சமயத்தில் ஒரு சிறுவன் எல்லைப் பகுதியை கடக்க முயல்கிறான். இதைப் பார்த்த பாபி சிம்ஹா, அந்த சிறுவனைப் பிடித்து விசாரிக்கின்றார். எல்லைக்கு அப்பால் உள்ள ஒரு வீட்டில் தனது தம்பி மாட்டிக்கொண்டதாகவும், அவனை மீட்க தான் செல்வதாகவும் அந்த சிறுவன் கூறுகிறான்.
‘நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள்’ என அந்த சிறுவனை எச்சரிக்கும் பாபி சிம்ஹா, அவனுக்காக ரிஸ்க் எடுக்க துணிகிறார். எல்லைக்கு அப்பால், அந்த சிறுவன் கூறிய இடத்துக்கு உயிரைப் பணயம் வைத்து செல்லும் பாபி சிம்ஹாவுக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது. அது என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
கெளதம் மேனனும், பாபி சிம்ஹாவும் ஈழத்தமிழர்களாக நடித்துள்ளனர். வழக்கமாக ஆங்கிலம் கலந்த தமிழை பேசும் கவுதம் மேனன், இந்த படத்தில் ஈழத்தமிழை பேசி அசத்தி இருக்கிறார். பாபி சிம்ஹாவும் நேர்த்தியாக நடித்துள்ளார். சிறுவன் தருணும் இயல்பாக நடித்து அசத்தி உள்ளார்.
‘அமைதி’யை மையமாக வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். போர் சூழலில் இருக்கும் பதற்றத்தை நேர்த்தியான திரைக்கதை மூலம் திறம்பட கையாண்டுள்ளார். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் ‘அமைதி’ அருமை.