அமுதவணன் இயக்கத்தில் ஆதில், செல்லா, பவாஸ், நிகாரிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் கோட்டா படத்தின் விமர்சனம்.
தந்தையின் ஆசையும்... மகனின் முயற்சியும்.. கோட்டா விமர்சனம்
பதிவு: நவம்பர் 20, 2020 21:19
கோட்டா விமர்சனம்
மலை கிராமத்தில் மனைவி சஜி சுபர்ணா, மகன் பவாஸ், மகள் நிகாரிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் செல்லா. வறுமையில் குடும்பத்தை நடத்தி வரும் செல்லா தன் பிள்ளைகள் இந்த சமுதாயத்தில் சிறந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
ஆனால், வறுமையும் கடன் பிரச்சினையும் ஆதிலை வாட்டுகிறது. இந்நிலையில் ஒரு விபத்தில் செல்லா உயிரிழக்கிறார். இதன்பின் செல்லாவை நம்பியிருந்த குடும்பம், கடன் பிரச்சினையை எப்படி தீர்த்தார்கள்? செல்லாவின் ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் செல்லா சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நேர்மையாகவும், சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற இவரது எண்ணம் ரசிக்க வைக்கிறது. மனைவியாக நடித்திருக்கும் சஜி சுபர்ணா எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
மகனாக வரும் பவாசின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். தந்தை இறந்தவுடன் கடன் சுமையை அடைக்க போராடுவதும், திறமையை வெளிக்காட்ட போராடுவதுமாக நடித்து கைதட்டல் பெறுகிறார். உண்மையாக திறமை வைத்திருக்கும் பவாஸ், நடிப்பில் நல்ல இடத்தை பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
மகளாக நடித்திருக்கும் நிகாரிகா, அலட்டல் இல்லாமல் அழகாக நடித்திருக்கிறார். தந்தையிடம் ஷூ கேட்கும்போதும், பள்ளியில் ஆசிரியையிடம் பயப்படும் போதும் பரிதவிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
சிறிய பட்ஜெட்டில் தரமான படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதவாணன். இப்படம் வெளியாகும் முன்பே சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது. திறமை இருந்தால் எங்கும் ஜெயிக்கலாம் என்று கதைக்கு ஏற்றாற்போல் இயக்குனரும் ஜெயிப்பார் என்று நம்பலாம். ஒரு சில இடங்களில் நடிகர்களிடம் செயற்கையான நடிப்பு தெரிந்தது. அதை சரி செய்திருக்கலாம். குழந்தைகளிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார்.
ஆலன் செபஸ்டியன் இசையில் பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒன்றி பயணித்திருக்கிறது. அமுதவாணன் மற்றும் கவாஸ்கர் ராஜு ஆகியோரின் ஒளிப்பதிவு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் 'கோட்டா' தனித்திறமை.
Related Tags :