சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் டேனி, கரிஷ்மா கவுல் ஆகியோர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘இரண்டாம் குத்து’ படத்தின் விமர்சனம்.
அடல்ட் காமெடி ஒர்க் அவுட் ஆனதா? - இரண்டாம் குத்து விமர்சனம்
பதிவு: நவம்பர் 16, 2020 18:40
இரண்டாம் குத்து படக்குழு
ஹீரோ சந்தோஷும், டேனியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக பழகி வருகின்றனர். இருவரும் ஒன்றாகவே சுற்றுவதால், பார்ப்பவர்கள் அவர்களை ஓரினச் சேர்க்கையாளர்கள் எனக்கூறி கிண்டல் செய்கின்றனர். தாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க இருவரும் அழகான இரு பெண்களை திருமணம் செய்கின்றனர்.
திருமணமான கையோடு ஹனிமூனுக்காக தாய்லாந்து செல்கின்றனர். அங்கே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்குகிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. நினைத்ததை அடைய முடியாமல் செத்துப்போன அந்தப் பேய், இருவரும் தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்கிறது. அவ்வாறு உறவு வைத்துக்கொள்பவர்கள் செத்து விடுவார்கள் என்பதையும் சொல்கிறது. இதனால் செய்வதறியாது இருக்கும் இருவரும், அந்த பிரச்னையிலிருந்து எப்படி தப்புகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
ஹீரோ சந்தோஷ், சிக்ஸ்பேக்ஸ் உடற்கட்டுடன் ஸ்டைலிஸாக இருந்தாலும் நடிப்பில் கோட்டை விட்டுள்ளார். முகபாவனைகள் எதுவும் அவருக்கு செட்டாகவே இல்லை. இரண்டு ஹீரோயின்களையும், பேயையும் கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். டேனியையும் இரண்டாவது ஹீரோ ரேஞ்சுக்கு காட்டி இருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து ஜோக் அடிக்கிறேன் என்கிற பெயரில் ஏதோ செய்து வைத்திருக்கிறார்கள்.
அனுபவ நடிகர்களான ரவி மரியா, சாம்ஸ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் காமெடிகள் சுத்தமாக எடுபடவில்லை. முழுக்க முழுக்க கிளாமரையும், இரட்டை அர்த்த வசனங்களை நம்பியே படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் சந்தோஷ். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கொஞ்சம் இலைமறை காயாக பேசிய வசனங்கள் இந்த படத்தில் நேரடியாகவே பேசப்பட்டுள்ளன.
பாடல்கள் சுமார் ரகம் தான். பேய் படம் என்று சொல்கின்றனர். ஆனால் ஒரு காட்சியில் தான் பயப்பட வைத்துள்ளார்கள். அது என்னவெனில், 3-ம் பாகம் வரப்போகுது என இறுதியில் காட்டுவது தான்.
மொத்தத்தில் ‘இரண்டாம் குத்து’ தேவையில்லை.