சினிமா செய்திகள்
வலிமை

வலிமை படத்திற்கு ஏற்பட்ட தடை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published On 2022-03-23 08:42 GMT   |   Update On 2022-03-23 08:42 GMT
அஜீத் நடிப்பில் வெளியான வலிமை படத்தை ஓ.டி.டி. தளத்தில் வெளியிட தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு.
நடிகர் அஜித் நடிப்பில் உருவான வலிமை திரைப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், 2016-ல் வெளியான தனது “மெட்ரோ” படத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.கே.கிரியே‌ஷன்ஸ் நிறுவன உரிமையாளர் ஜெ.ஜெயகிருஷ்ணன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வசதியான வாழ்கைக்காக சங்கிலி பறிப்பது, போதைப் பொருள் கடத்தலில் தம்பிக்கு தொடர்புள்ளதை அறிந்து கொள்ளும் கதாநாயகன், தம்பியை கொல்வது போல படத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. பிற மொழிகளில் மெட்ரோ படத்தை தயாரிக்க உள்ள நிலையில், அதே அம்சங்களுடன் வலிமை படமாக்கப்பட்டது காப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது. எனவே வலிமை படத்தை சாட்டிலைட் சேனல், ஓ.டி.டி. தளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


வலிமை


இதற்கிடையில் வலிமை திரைப்படம் மார்ச் 25-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதால், அதற்கு தடைக்கோரி கூடுதல் மனுவும் மனுதாரர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, இயக்குனர் எச்.வினோத் தரப்பு பதில் மனுவை வக்கில் விஜயன் சுப்ரமணியம் தாக்கல் செய்தார்.


அந்த பதில் மனுவில், செய்தித்தாள்களில் அன்றாடம் வரும் சங்கிலி பறிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை போன்ற செய்திகளின் அடிப்படையில் உருவான வலிமை படத்தின் கதை, கரு, கதாப்பாத்திரங்கள், உச்ச காட்சி அனைத்தும் வெவ்வேறானவை. மெட்ரோ படத்தின் கதை, கதாபாத்திரம் பயன்படுத்தப்பட்டதாக கூறுவது தவறு.


எனவே எந்த காப் புரிமையையும் மீறவில்லை. இணையதளங்களில் வெளியான விமர்சனங்களில் மெட்ரோவை ஒப்பிட்டு கூறப்படவில்லை. தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் வழக்கு தாக்கல் செய்த ஜெயகிருஷ்ணனுக்கு எதிராக 10கோடி ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர உள்ளேன்.


வலிமை

பெருந்தொகை மூல தனத்தில் எடுக்கப்பட்ட வலிமை படத்தை, ஓ.டி.டி. தளங்களில் வெளியிடவும், சாட்டிலைட் உரிமை தொடர்பாகவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில் தடை விதித்தால் பெருத்த பாதிப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார். பதில் மனுவை ஏற்ற நீதிபதி, வலிமை படத்தின் ஓ.டி.டி. வெளியீட்டிற்கு தடைவிதிக்க மறுத்து, பிரதான வழக்கின் விசாரணையை ஏப்ரல் 12-ந் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
Tags:    

Similar News