சினிமா
ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த் படப்பிடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்

Published On 2021-09-06 09:45 GMT   |   Update On 2021-09-06 11:29 GMT
தமிழில் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக வலம் வரும் ஸ்ரீகாந்த், நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்புக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள்.
வெத்துவேட்டு படத்தை இயக்கிய இயக்குனர் எஸ்.மணிபாரதி தற்போது ஸ்ரீநிதி புரொடக்சன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிப்பில் "தி ஜர்னி ஆஃப் பெட்"  என்ற தமிழ்ப் படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீகாந்த் நாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் நாயகியாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார். மேலும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குனர் மணிபாரதி கூறும்போது, “இப்படம் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ளது. ஸ்ரீகாந்த் ஐடியில் பணிபுரியும் இளைஞராக நடித்துள்ளார். ஸ்ரீகாந்தும் அவரது நண்பர்களும் ஊட்டிக்கு ஒன்றாக பிக்னிக் செல்லும்போது நடக்கும் ஒரு கொலையும் அதைத்தொடர்ந்து அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தான் படத்தின் கதை. சுருக்கமாகச் சொன்னால் ஒரு விஷயத்தை குருட்டாம்போக்கில் அணுகினால் அது மேலும் நம்மை சிக்கலில் கொண்டுபோய் விடும் என்பதை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளோம்.


ஸ்ரீகாந்த் - சிருஷ்டி டாங்கே

ஊட்டியைச் சுற்றி உள்ள வனப்பகுதியில் கிட்டத்தட்ட 35 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். சிருஷ்டி டாங்கே இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறைந்த ஆடை அணிந்து கடுங்குளிரில் நடுங்கியபடியே சிருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். குளிரும் மழையும் படப்பிடிப்பு சமயத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தன. ஒவ்வொரு நாளும் வெறும் 4 அல்லது 5 மணிநேரங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது.

கொரோனா தாக்கத்திற்கு முன்பு பாதி படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம். ஆனால் முதல் அலை சற்று ஓய்ந்த பிறகு மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்போன சமயத்தில் முறையான காவல்துறை அனுமதி இருந்தாலும் கூட, அந்த பகுதியை சேர்ந்த மக்களிடமிருந்து எங்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. கொரோனா குறித்த அச்சத்தில் இருந்த அவர்களிடம், படப்பிடிப்பில் நாங்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி விளக்கி, ஒருவழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்தோம்” என்றார்.
Tags:    

Similar News