சினிமா
ஆர்யா

ஆர்யாவை பண மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சியா? ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனு தாக்கல்

Published On 2021-09-03 02:12 GMT   |   Update On 2021-09-03 02:12 GMT
முதல் தகவல் அறிக்கையில் பெயர் இருந்தும் நடிகர் ஆர்யாவை மோசடி வழக்கில் தப்ப வைக்க முயற்சி நடப்பதாக ஜெர்மனி வாழ் இலங்கை பெண் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜெர்மனி நாட்டில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர், நடிகர் ஆர்யா தன்னிடம் பழகி திருமணம் செய்வதாக கூறி, ரூ.70 லட்சத்தை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ‘ஆன்லைன்’ வழியாக புகார் அனுப்பி இருந்தார்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி நடிகர் ஆர்யா, அவரது தாயார் ஜமீலா, புளியந்தோப்பைச் சேர்ந்த முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகியோர் மீது கடந்த மாதம் 19-ந்தேதி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் ஆர்யா போன்று பேசி அந்த பெண்ணிடம் மோசடி செய்ததாக முகமது அர்மான், ஹூசைனி ஆகியோரை சமீபத்தில் போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் ஜாமீன்கோரி சென்னை எழும்பூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஜெர்மனி பெண் தரப்பில் வக்கீல் ஆனந்தன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2018-ம் ஆண்டுஜெர்மனிவாழ் இலங்கை பெண்ணை, நடிகர் ஆர்யா தனது ‘வாட்ஸ்-அப்’ எண் மூலம் தொடர்புகொண்டு தனது காதலை வெளிப்படுத்தி அவரை திருமணம் செய்துகொள்வதாக உறுதி அளித்துள்ளார். ஆர்யாவை திருமணம் செய்து வைப்பதாக அவரது தாயாரும் உறுதி அளித்துள்ளார். ‘வீடியோ’ அழைப்பிலும் அவர்கள் பேசி உள்ளனர். இந்தநிலையில், அவர்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக கூறி ஜெர்மனி பெண்ணிடம் பணம் கேட்டுள்ளனர். இதை உண்மை என நம்பி அவர்களுக்கு ரூ.70 லட்சத்து 40 ஆயிரம் வரை அனுப்பி உள்ளார். சினிமா பிரபலம் என்பதால் தன்னால் வங்கிக்கு சென்று பணத்தை எடுக்க இயலாது எனக்கூறி அவரது ஆட்களின் வங்கி கணக்கு மூலம் இந்த பணத்தை ஆர்யா பெற்றுள்ளார்.



ஆர்யா, ஜமீலா ஆகியோரை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கும் நோக்கில் முகமது அர்மான் இந்த மோசடியில் தான் மட்டுமே ஈடுபட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டில் சரண் அடைந்து கூறி உள்ளார். ஆனால், அப்போது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்படாததால் அவர் சரண் அடைந்ததை கோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து அவர், முன்ஜாமீன்கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இவை அனைத்தும் ஆர்யா, ஜமீலா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்க வேண்டும் என்ற அடிப்படையில் நடத்தப்பட்டது ஆகும்.

இந்தநிலையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர்கிரைம்’ போலீசார், ஜெர்மனி பெண்ணின் புகாரை சி.பி. சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு அனுப்பி உள்ளதாக கடிதம் அனுப்பினர். சி.பி. சி.ஐ.டி. போலீசாரும் நடவடிக்கை எடுக்காத நிலையில் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையே நடிகர் ஆர்யா உள்ளிட்ட 4 பேர் மீது 19.8.2021 அன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அர்மான், அவரது உறவினர் ஹூசைனி ஆகிய 2 பேரை மட்டும் கைது செய்துள்ளனர். ஆர்யா, ஜமீலா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதும் அவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. ஆர்யாவை இந்த வழக்கில் இருந்து தப்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே குற்றத்தை தாங்கள் செய்ததாக இந்த மனுதாரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆர்யா, தன்னுடைய ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய பதிவுகளை தனக்கு வழங்கும்படி ஜெர்மனி பெண் தரப்பில் ‘வாட்ஸ்-அப்’ நிறுவனத்துக்கு மனு தரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை தேவைப்படுகிறது. ஜெர்மனி பெண்ணை ஏமாற்றவில்லை என்று ஆர்யா, அவரது தாயார் ஆகியோர் நிரூபிக்கவில்லை. அதேவேளையில் அவர்கள் அமைதியாக இருந்து கொண்டு இந்த மனுதாரர்களை வைத்து வழக்கை நடத்தி வருகிறார்கள். எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி முடிக்கும் வரை ஜாமீன் வழங்கக்கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News