தொடர்புக்கு: 8754422764

கடின உழைப்பால் உயர்ந்த நாயகன்... சூர்யா பிறந்தநாள் ஸ்பெஷல்

ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்யுடன் சூர்யா

மல்ட்டிஸ்டாரர் நடிகர்

சூர்யாவின் முதல் படமான 'நேருக்கு நேர்' இரட்டை நாயகர்கள் படம். அதில் விஜய்யும் நடித்திருந்தார். அதற்கடுத்து விஜயகாந்துடன் 'பெரியண்ணா' மீண்டும் விஜய்யுடன் 'ப்ரண்ட்ஸ்', விக்ரமுடன் 'பிதாமகன், மோகன்லால், ஆர்யாவுடன் 'காப்பான்' என தமிழில் அதிக மல்டிஸ்டாரர் படங்களில் நடித்த நட்சத்திர நடிகர் சூர்யாதான். அதேபோல் 'குசேலன்', 'அவன் இவன்', 'மன்மதன் அம்பு', 'கோ', 'சென்னையில் ஒரு நாள்', 'கடைக்குட்டி சிங்கம்' என மற்ற நடிகர்களின் படங்களில் ஒரு சில காட்சிகளில் வந்து செல்லும் கெஸ்ட் ரோல்களிலும் சூர்யா நடித்திருக்கிறார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர்

திரைப்பட நட்சத்திரங்கள் திரையைத் தாண்டி அதிகம் தலைகாட்டக் கூடாது என்ற விதியை உடைத்தவர் சூர்யா. அதிகமாக பொது நிகழ்ச்சிகளிலும், கலை விழாக்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கோடிஸ்வரன் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன் மூலமாகவும் வீடுகளிலும் மக்களின் உள்ளங்களிலும் நுழைந்தார்.


கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் சூர்யா

தரமான தயாரிப்பாளர்

2015-ல் 2டி என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார் சூர்யா. தன் மனைவியான ஜோதிகாவை கதையின் நாயகியாக்கி '36 வயதினிலே', 'மகளிர் மட்டும்', 'ஜாக்பாட்', 'பொன்மகள் வந்தாள்' போன்ற படங்களைத் தயாரித்தார். அதன் மூலம் ஜோதிகா என்னும் திறமை வாய்ந்த நடிகையின் மறு அறிமுகமும் வெற்றிகரமான இரண்டாம் இன்னிங்ஸும் சாத்தியமானது. இதைத் தவிர 'பசங்க 2', '24', 'கடைக்குட்டி சிங்கம்' 'உறியடி 2' என பல வகையான தரமான படங்களைத் தயாரித்திருக்கிறார். 'கடுகு', 'சில்லுக் கருப்பட்டி' போன்ற தரமான சிறுமுதலீட்டுப் படங்களை வாங்கி வெளியிட்டிருக்கிறார். 

சமூகநலப் பணிகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பிரச்சாரம் உட்பட பல சமூகநல நோக்கம் கொண்ட திட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பவரான சூர்யா 2006-ல் அகரம் அறக்கட்டளையை நிறுவினார். அதன் மூலம் இன்றுவரை ஆயிரக்கணக்கான ஏழைக் குழந்தைகளும் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளும் உயர்கல்வி பெற்று முன்னேறியிருக்கிறார்கள். அகரம் அறக்கட்டளை இன்னும் பல சமூகநலத் திட்டங்களுக்கு தன் சிறகை விரித்திருக்கிறது. அதோடு கல்வி உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகள் தொடர்பாகத் துணிச்சலாகக் குரல்கொடுப்பவராகவும் இருக்கிறார் சூர்யா. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை விமர்சித்து அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை பரவலான பாராட்டுகளைப் பெற்றது. சமீபத்தில் ஒளிப்பதிவு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக முதல் ஆளாக சூர்யாதான் குரல் கொடுத்தார்.

இவ்வாறு நடிகர், தயாரிப்பாளர், சமூக அக்கறை கொண்டவர் என பல முகங்கள் கொண்டு தமிழ் சினிமாவில் ஜொலித்து வரும் சூர்யா, இன்னும் பல சாதனைகள் படைத்து நலமுடன் வாழ மாலைமலர் இணையதளம் சார்பாக வாழ்த்துகிறோம்.