ஆட்டோமொபைல்
ஜெனிசிஸ் ஜி.வி 80 கான்செப்ட்

விரைவில் இந்தியா வரும் ஹூண்டாய் ஜெனிசிஸ்

Published On 2019-07-29 06:24 GMT   |   Update On 2019-07-29 06:24 GMT
இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் விரைவில் இங்கு ஜெனிசிஸ் பிராண்டு கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சென்னையில் ஆலை அமைத்து செயல்பட்டு வரும் கொரிய நிறுவனமான ஹூண்டாய், சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிரிவில் எஸ்.யு.வி. மாடலை முதலில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீவிரமாக இருக்கிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார்கள் அனைத்துமே ‘ஜெனிசிஸ்’ என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சர்வதேச அளவில் ஜி70, ஜி80 மற்றும் ஜி90 ரக செடான் கார்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. விரைவிலேயே இப்பிரிவு 2 மாடல் எஸ்.யு.வி. கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் முதல் மாடல் ஜி.வி 80 என்ற பெயரில் வெளியாகிறது. மற்றொன்று ஜி.வி 70 என்ற பெயரில் தயாராகிறது.

இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் ஜெனிசிஸ் பிராண்டில் எஸ்.யு.வி. மாடலையே அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய மாடல்கள் பெரும்பாலும் சி.கே.டி. மூலமாக அதாவது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.


தற்போதைக்கு ஜி.வி 80 மாடல் கார்கள் அனைத்துமே வெளிநாடுகளுக்கென தயாரிக்கப்படுவதால், இவை அனைத்துமே இடது பக்க ஸ்டீரிங் கொண்டவையாக உள்ளன. இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும்போது, ஸ்டீரிங் பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

ஜி.வி70 கார் ஹூண்டாய் டக்சன் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருப்பதால் இதில் வலதுபக்க ஸ்டீரிங் கொண்ட கார்கள் உள்ளன. எனவே ஜி.வி70 மாடலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து எவ்வித மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்யலாம். விரைவிலேயே இந்திய சாலைகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்.யு.வி.க்கள் வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.
Tags:    

Similar News