ஆட்டோமொபைல்
பாஸ்டேக் ஸ்டிக்கர்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் - டிசம்பர் முதல் கட்டாயமாகிறது

Published On 2019-11-27 11:27 GMT   |   Update On 2019-11-27 11:27 GMT
நாடு முழுக்க இயங்கி வரும் சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களில் பாஸ்டேக் ஸ்டிக்கர் பயன்படுத்தும் நடைமுறை டிசம்பர் முதல் கட்டாயமாகிறது.



நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களிடம் தானியங்கி முறையில் கட்டணம் வசூலிப்பதற்கு வகை செய்யும் பாஸ்டேக் ஸ்டிக்கர் தொழில்நுட்பம் வரும் டிசம்பர் 1-ந் தேதியில் இருந்து கட்டாயமாக்கப்படுகிறது.

மத்திய அரசு கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறையை அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை அரசு துறைகளில் 100 சதவீதம் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக பெரும்பாலான பண பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையில் கொண்டு வரப்படுகிறது.

அதன்படி, வருகிற 1-ந் தேதி முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அமலுக்கு வருகிறது. இதற்கு ’பாஸ்டேக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

பாஸ்டேக் என்பது தொழில்நுட்பத்துடன் கூடிய நவீன ஸ்டிக்கராகும். இதற்குள் நுண்ணிய சிப் மற்றும் ஆன்டனா பொருத்தப்பட்டு இருக்கும். வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் இதை ஒட்டிக்கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்களில் உள்ள குறியீடு ஆர்.எப்.ஐ.டி. என்று சொல்லப்படும் ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.

வாகனங்களின் முன்பக்க கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பாஸ்டேக் ஸ்டிக்கர், சுங்கச்சாவடிகளை நெருங்கும்போது அங்கு வைக்கப்பட்டுள்ள கருவியுடன் உடனடியாக தொடர்பை ஏற்படுத்தும். அந்த வாகனத்தின் ரகம் என்ன? அதற்காக வசூலிக்கப்பட வேண்டிய கட்டணம் எவ்வளவு? என்பதை உடனடியாக துல்லியமாக கணிக்கும்.



மேலும், வாகன ஓட்டியின் வங்கி கணக்கை இந்த கருவி இணைப்பதோடு, அங்கிருந்து சுங்கக் கட்டணமாக அந்த வாகனம் செலுத்த வேண்டிய கட்டணத்தை மட்டும் தானாக எடுத்துக்கொள்ளும். எனவே பாஸ்டேக் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கென்று தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வழியில் வாகனங்கள் நிற்காமல் போய்க்கொண்டே இருக்க இதன் மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பாதையில் பாஸ்டேக் ஒட்டாத வாகனங்கள் வந்துவிட்டால், 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

வருகிற 1-ந் தேதியில் இருந்து அரசு இதை கட்டாயமாக்க உள்ளது. தற்போது தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 400-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சுங்கக் கட்டணம் செலுத்த வரிசையில் வாகனங்கள் காத்து நிற்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் வாகனங்களில் எரிபொருள் செலவு குறைகிறது.

இந்த திட்டத்தில் வாகனங்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அத்துடன் பார்கோடு வசதி கொண்ட பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒன்றும் வழங்கப்படும். அந்த பாஸ்டேக் ஸ்டிக்கரை பல்வேறு வங்கிகள் வழங்குகின்றன. அந்த வங்கிகளின் பெயர்களை என்.பி.சி.ஐ. இணையதளத்தில் காணலாம். வாகனங்களின் தரத்துக்கு ஏற்ப வெவ்வேறு நிறங்களில் ஸ்டிக்கர்கள் தரப்படுகின்றன. 

வைலட், ஆரஞ்ச், பச்சை, மஞ்சள், பிங்க், ஊதா, கருப்பு ஆகிய வண்ணங்கள் உள்ளன. உதாரணமாக, காருக்கு தனியார் வங்கி ஒன்றில் ரூ.500 செலுத்த வேண்டும். இதில், குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.200, பாஸ்டேக் வைப்புத்தொகை ரூ.200, இணைப்பு கட்டணம் ரூ.100 ஆகியவை அடங்கும்.

இந்த பாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் வங்கி கணக்கை இணைத்துக்கொள்ளலாம். கட்டணம் எடுக்கப்படும் போதெல்லாம் எஸ்.எம்.எஸ். தகவலும் வந்துவிடும். வாகனத்தை விற்கும்போது பாஸ்டேக் உடனான இணைப்பை துண்டிக்கவும் வசதி உள்ளது.
Tags:    

Similar News