ஆட்டோமொபைல்
போக்குவரத்து காவல் துறை

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறல் அபராத கட்டணம் குறைய வாய்ப்பு

Published On 2019-09-12 08:58 GMT   |   Update On 2019-09-12 08:58 GMT
நாடு முழுக்க விதிக்கப்பட்டிருக்கும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத கட்டணம் தமிழகத்தில் சற்றே குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.



அதிகரித்து வரும் வாகன விபத்துக்களில் ஆண்டுதோறும் பலர் உயிரிழக்கிறார்கள். வாகனங்களில் அதிவேகமாக செல்வது, போக்குவரத்து விதிகளை மீறுவது உள்ளிட்ட செயல்களே இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு சமீபத்தில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. 1988-ம் ஆண்டு அறிமுகமான மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கு முன்பு இது போன்று பெரிய அளவில் அதிரடியாக திருத்தங்கள் செய்யப்படவில்லை.

வாகன சட்ட விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு பல மடங்கு அபராத கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கான அபராத கட்டணத்தை 10 மடங்கு வரையில் உயர்த்தி மத்திய அரசு அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டது.

ஹெல்மெட் அணியாமல் மோட்டார்சைக்கிளில் செல்பவர்களுக்கு ரூ.100 மட்டுமே அபராம் விதிக்கப்பட்டு வந்தது. இது புதிய சட்ட திருத்தத்தின்படி 10 மடங்கு உயர்ந்து 1000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10 ஆயிரமும், லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று பல்வேறு வகையான வாகன விதி மீறல்களுக்கும் பல மடங்கு கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கூடுதல் அபராதம் விதிக்கும் முறை கடந்த 1-ந்தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ள தாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பால் இந்த புதிய அபராத முறை அமல்படுத்தப்படாமலேயே உள்ளது.



மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இன்னும் அமலாகாத நிலையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி புதிய சட்ட திருத்தத்தை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்து விட்டார். தமிழகத்திலும் புதிய சட்ட திருத்த மசோதா முறைப்படி இன்னும் அமல்படுத்தப்படாமலேயே உள்ளது.

தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னை, கோவை, குமரி உள்ளிட்ட இடங்களில் போதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு கோர்ட்டில் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் மற்ற விதிமீறல்களுக்கான அபராதத்தை பழைய முறையிலேயே வசூலித்து வருகிறார்கள்.

இதனால் புதிய அபராத முறை தமிழகத்தில் எப்போது நடைமுறைப்படுத்தப்படும் என்கிற கேள்வி எழுந்து இருந்தது. இந்த நிலையில் டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் புதிய சட்ட திருத்தத் தின்படி அபராதம் விதிக்கப் பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் மட்டும் ஒரே நாளில் 39 ஆயிரம் பேர் அபராதம் செலுத்தி இருந்தனர். லட்சக்கணக்கான ரூபாய் வசூலாகி இருந்தது.

இருப்பினும் பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் புதிய சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு புதிய வாய்ப்பை வழங்கியுள்ளது. மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி, அபராத கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை மந்திரி நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிய சட்ட திருத்தத்தின்படி அபராதம் விதிக்கும் நடைமுறையை அமல்படுத்தவே தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி விதிமீறல் கட்டணங்களை கொஞ்சம் குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது. 

வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி யுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார். இதன் மூலம் இன்னும் சில தினங்களில் தமிழகத்திலும் புதிய வாகன சட்ட திருத்த கட்டணம் அமலாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News