ஆட்டோமொபைல்
மக்கள் ஆட்டோ

மின்சாரத்தில் இயங்கும் மக்கள் ஆட்டோ சென்னையில் அறிமுகம்

Published On 2019-08-28 05:02 GMT   |   Update On 2019-08-28 05:02 GMT
ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 100 கிலோமீட்டர் வரை ஓடும் மின்சார ஆட்டோ சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பல்வேறு நகரங்கள் மற்றும் தலைநகர் பகுதிகளில் பெட்ரோல், டீசலில் இயங்கும் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் காரணமாக மின்சார ஆட்டோக்கள் பயன்பாடு சந்தையில் அதிகரித்து வருகிறது.

இதில் மஹிந்திரா நிறுவனம் மின்சாரத்தில் இயங்கும் இரண்டு மாடல் ஆட்டோக்களை அறிமுகம் செய்துள்ளது. ட்ரியோ மற்றும் ட்ரியோ யாரீ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆட்டோவில் நான்கு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் ஷேர் ஆட்டோ பயன்பாட்டிலான அமைப்பை பெற்றுள்ளது.

ட்ரியோ ஆட்டோ வழக்கமாக மூன்று பயணிகள் அமர்ந்து பயணிக்கும் வடிவமைப்பை கொண்டுள்ளது. ஐ.பி.67 தொழில்நுட்பம் பெற்ற இந்த ஆட்டோ தூசு மற்றும் தண்ணீரில் இருந்து பாதுகாக்கக்கூடிய வகையிலான பேட்டரிகளை பெற்றுள்ளது. இவை லித்தியம் அயன் ரக பேட்டரிகள் ஆகும். அதிகபட்சமாக 45 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த ட்ரியோ ஆட்டோ 30 என்.எம். டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த வகையில் மக்கள் ஆட்டோ நிறுவனம் பழைய பெட்ரோல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. மின்சார ஆட்டோவை இயக்குவதில் முன்னணியில் இருக்கும் இந்நிறுவனம் முழுமையாக மாற்றப்பட்ட எலக்ட்ரிக் ஆட்டோவை சென்னையில் அறிமுகம் செய்துள்ளது.



ஆட்டோவின் சிறப்பம்சம் பற்றி மக்கள் ஆட்டோவின் தலைவர் மன்சூர் அலிகான் கூறியதாவது:-

இந்தியாவில் பெட்ரோல், டீசல் ஆட்டோவை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றும் முயற்சிக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு மத்திய-மாநில அரசுகளின் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. சென்னையில் ஏற்கனவே 1½ லட்சம் ஆட்டோக்கள் உள்ள நிலையில் புதிதாக எலக்ட்ரிக் ஆட்டோ தயாரித்தல் கூடுதல் நெரிசல் தான் ஏற்படும்.

இதை கருத்தில் கொண்டு பெட்ரோல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்றி வருகிறோம். இதற்கு ரூ. 1½ லட்சம் செலவாகிறது. புதிதாக மாற்றப்பட்ட எலக்ட்ரிக் ஆட்டோ அதிக பட்சமாக 100 கிலோ மீட்டர் வரை செல்லும். அதன் பிறகு மீண்டும் ‘சார்ஜ்’ செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News