தொழில்நுட்பம்

பிளாக்பெரி கீஓன் ஸ்மார்ட்போன்: டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் அறிமுகம்

Published On 2017-02-26 00:18 GMT   |   Update On 2017-02-26 00:18 GMT
சீன ஸ்மார்ட்போன நிறுவனமான டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. பிளாக்பெரி கீஓன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
பார்சிலோனா:

சீனாவின் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டிசிஎல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தனது முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை வெளியிட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளாக்பெரி கீஓன் என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.     

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுக்க தேர்வு செய்யப்பட்டுள்ள நாடுகளில் முதலில் விற்பனைக்கு வரும் பிளாக்பெரி கீஓன் 549 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.36,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. 

சிறப்பம்சங்களை பொருத்த வரை 4.5 இன்ச் IPS 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.  

புகைப்படங்களை எடுக்க 12 எம்பி சோனி IMX3778 சென்சார், டூயல்டோன் எல்இடி பிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற கேமரா கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களிலும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. யுஎஸ்பி டைப்-சி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 3505 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் வழங்க குவிக் சார்ஜ் 3.0 வசதி வழங்கப்பட்டுள்ளது. 

4ஜி, வை-பை, NFC, GPS, ப்ளூடூத் மற்றும் 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட கனெக்டிவிட்டி அம்சங்களும் ஸ்மார்ட் குவெர்டி கீபோர்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கீபோர்டின் ஸ்பேஸ் பாரில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.

Similar News