தொழில்நுட்பம்

சர்வதேச சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்த சாம்சங்

Published On 2019-05-30 04:56 GMT   |   Update On 2019-05-30 04:56 GMT
சாம்சங் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.



சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தை 2019 ஆண்டின் முதல் காலாண்டில் 2.7 சதவிகிதம் சரிவை சந்தித்ததாக கார்ட்னர் எனும் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ள போதும் ஹூவாய் நிறுவனம் சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தை பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிவித்துள்ளது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2019 முதல் காலாண்டில் சாம்சங் நிறுவனம் 19.2 சதவிகித பங்குகளுடன் முதலிடம் பிடித்து இருப்பதாக கார்ட்னர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் ஐந்து இடங்களை பிடித்த நிறுவனங்கள் பட்டியலில் ஹூவாய் நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் அதிகளவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.



குறைந்தளவு புதிய தொழில்நுட்பங்களும், அதிகளவு விலை நிர்ணயிக்கப்பட்டதால் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களின் விற்பனை சரிந்துள்ளது. 2019 முதல் காலாண்டில் சீனா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்களின் விற்பனை முறையே 15.8 சதவிகிதம் மற்றும் 3.2 சதவிகிதம் குறைந்துள்ளது.

ஐரோப்பா மற்றும் சீனாவில் ஹூவாய் நிறுவன ஸ்மார்ட்போன்களின் விற்பனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இரு நாடுகளில் ஹூவாய் ஸ்மார்ட்போன் விற்பனை முறையே 69 சதவிகிதம் மற்றும் 35 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சீனாவில் மட்டும் ஹூவாய் நிறுவனம் 29.5 சதவிகித பங்குகளை கொண்டிருக்கிறது.
Tags:    

Similar News