தொழில்நுட்பம்

இன்டெல் வியாபாரத்தை வாங்க ஆப்பிள் போட்ட திட்டம்

Published On 2019-04-28 09:11 GMT   |   Update On 2019-04-28 09:11 GMT
ஆப்பிள் நிறுவனம் இன்டெல் நிறுவனத்தின் ஒரு பிரிவை கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple



ஆப்பிள் நிறுவனம் இன்டெல் ஸ்மார்ட்போன் மோடெம் சிப் வியாபாரத்தை கைப்பற்ற திட்டமிட்டதாகவும், இதுபற்றி இரு நிறுவனங்களிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் ஐபோன்களுக்கான வயர்லெஸ் தொழில்நுட்பத்தை மேம்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவல்களில் இருநிறுவனங்களிடையே கடந்த ஆண்டு வரை பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், தற்சமயம் இது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தது. இன்டெல் தொழில்நுட்பத்தை கைப்பற்றுவதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் இதனை சாத்தியப்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்திருந்தது. தற்சமயம் இன்டெல் நிறுவனம் வியாபாரத்தை விற்பனை செய்வதற்கு மாற்றாக புதிய வழிகளை கண்டறிந்து இருப்பதாக கூறப்படுகிறது.



குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே சமீபத்தில் கையெழுத்தாகி இருக்கும் சுவாரஸ்ய சமாதான ஒப்பந்தம் காரணமாக இன்டெல் நிறுவனம் மொபைல் 5ஜி போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தது. இரு நிறுவனங்களின் அறிவிப்பு காரணமாக இந்த தொழில்நுட்பத்தை விநியோகம் செய்து லாபம் ஈட்டுவது தற்சமயம் சரியாக இருக்காது என இன்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி தெரிவித்தார். 

ஏப்ரல் 16 ஆம் தேதி இன்டெல் நிறுவனம் 5ஜி மொபைல் மோடெம் தொழில்நுட்ப வியாபாரத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. முன்னதாக குவால்காம் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே கையெழுத்தான ஒப்பந்தம் பற்றிய செய்தி வெளியானது. 

இதுதவிர இன்டெல் நிறுவனம் ஐபோன்களுக்கென சிப்செட்களை உருவாக்கி வந்தது. இன்டெல் சிப்செட் கொண்ட ஐபோன்கள் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
Tags:    

Similar News