தொழில்நுட்பம்

மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ தான் டாப்

Published On 2019-04-27 04:19 GMT   |   Update On 2019-04-27 04:19 GMT
இந்திய டெலிகாம் சந்தையை தொடர்ந்து மொபைல் போன் சந்தையிலும் ரிலையன்ஸ் ஜியோ ஆதிக்கம் செலுத்துகிறது. #RelianceJio



இந்தியாவில் 2017 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோபோனினை அறிமுகம் செய்தது. ஜியோபோன் வழக்கமான ஃபீச்சர்போன் வடிவமைப்பில் 4ஜி வோல்ட்இ வசதி மற்றும் 22 இந்திய மொழிகளில் இயக்கும் வசதி கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஜியோபோனின் மேம்பட்ட மாடல் ஜியோபோன் 2 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டாம் தலைமுறை ஜியோபோன் 2 மாடலில் குவெர்ட்டி கீபோர்டு வழங்கப்பட்டது. இந்த மொபைல் போன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்த இரண்டு ஜியோபோன்களின் விற்பனை தொடர்ந்து அதிகரிக்கிறது. இதன் காரணமாக இந்திய ஃபீச்சர்போன் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ முன்னணி நிறுவனமாகி இருக்கிறது.

கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோபோன் 30 சதவகித பங்குகளுடன் இந்திய மொபைல் போன் சந்தையில் 2019 முதல் காலாண்டில் முன்னணியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் 15 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது.



இருநிறுவனங்களை தொடர்ந்து லாவா நிறுவனம் 13 சதவிகித பங்குகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மூன்று நிறுவனங்களை தொடர்ந்து நோக்கியா நிறுவனம் 8 சதவிகித பங்குகளுடன் நான்காவது இடத்திலும், ஐடெல் 7 சதவிகித பங்குகளுடன் ஐந்தாவது இடமும் பிடித்திருக்கின்றன.

இதுதவிர உலகம் முழுக்க சுமார் 40 கோடி ஃபீச்சர் போன்கள் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் ஸ்மார்ட்போன் சந்தையை போன்று இல்லாமல் ஃபீச்சர் போன் சந்தை கணிசமான வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2018-19 நான்காவது காலாண்டு காலத்தில் ரூ.840 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்தது. இதன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 30.6 கோடியாக அதிகரித்தது.
Tags:    

Similar News