தொழில்நுட்பம்

டச்சு அரசு விசாரணை பிடியில் ஆப்பிள்

Published On 2019-04-12 11:06 GMT   |   Update On 2019-04-12 11:06 GMT
ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அந்நிறுவன செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகள் வழங்கிய விவகாரத்தில் டச்சு அரசாங்கம் விசாரணையை துவங்கியுள்ளது. #Apple



ஆப்பிள் நிறுவனம் மீது ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், டச்சு அரசாங்கம் ஆப்பிள் மீது விசாரணையை துவங்கியுள்ளது.

ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரில் ஆப்பிள் செயலிகளுக்கு மட்டும் விசேஷ சலுகைகளை வழங்கியதை தொடர்ந்து டச்சு அரசு ஆப்பிள் நிறுவனத்தை விசாரணைக்கு அழைத்திருக்கிறது. டச்சு அரசாங்கத்தின் ஏ.சி.எம். நிறுவனம் விசாரணையை நடத்துகிறது. 

இந்த விவகாரத்தில் ஆப்பிள் மட்டுமின்றி கூகுள் நிறுவனம் மீதும் எதிர்காலத்தில் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகளை பரிந்துரை செய்வதில் கூகுள் நிறுவனமும் பாரப்பட்சம் காட்டுவதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்கள் இருநிறுவனங்களுக்கும் அதிகளவு வருவாய் ஈட்டித்தரும் தளங்களாக இருக்கின்றன. ஆப் ஸ்டோர்களில் டச்சு செய்தி நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளில் ஆப்பிள் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது.



ஆப் டெவலப்பர்கள் செயலியினுள் வாங்கும் சேவைகளுக்கென செலுத்தும் கட்டணம், ஐபோனின் அனைத்து அம்சங்களை பயன்படுத்துவதில் ஆப் டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள் ஆப் ஸ்டோர் மட்டுமின்றி கூகுள் பிளே ஸ்டோரிலும் இதுபோன்ற பிரச்சனைகளை டெவலப்பர்கள் எதிர்கொள்ளும் பட்சத்தில் செயலிகளை உருவாக்குவோர் வெளிப்படையாக தகவல் தெரிவிக்கலாம் என ஏ.சி.எம். தெரிவித்துள்ளது. செயலிகளை உருவாக்குவோர் வழங்கும் விவரங்களை விசாரணையில் பயன்படுத்துவதாக ஏ.சி.எம். தெரிவித்துள்ளது.

ஆப்பிள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை ஆப்பிள் முழுமையாக மறுத்திருக்கிறது. மேலும் ஆப் ஸ்டோரில் அனைத்து செயலிகளுக்கும் சம அளவு வாய்ப்புகள் வழங்கப்படுவதை ஏ.சி.எம். உறுதிப்படுத்தும் என நம்புவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News