தொழில்நுட்பம்

சீனாவில் சில ஐபோன்களின் விற்பனைக்கு திடீர் தடை

Published On 2018-12-12 04:51 GMT   |   Update On 2018-12-12 04:51 GMT
ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக குவால்காம் பதிவு செய்த வழக்கில் அந்நிறுவனத்தின் சில ஐபோன்கள் சீனாவில் விற்பனை செய்யக் கூடாது என சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Apple #iPhone



ஐபோன் மாடல்களில் குவால்காம் காப்புரிமைகளை அவற்றுக்கான கட்டணம் செலுத்தாமல் ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தியதாக குவால்காம் நிறுவனம் சீனாவில் வழக்கு தொடர்ந்து இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில் ஆப்பிள் நிறுவனத்தின் சில ஐபோன் மாடல்களை விற்பனை செய்ய தடை விதித்து சீன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீன நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தனது பழைய ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

குவால்காம் பதிவு செய்திருக்கும் வழக்கில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் X, ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 8, ஐபோன் 7 பிளஸ், ஐபோன் 7, ஐபோன் 6எஸ் பிளஸ் மற்றும் ஐபோன் 6எஸ் உள்ளிட்ட மாடல்களின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. குவால்காம் வழக்கு பதிவு செய்த பின் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மற்றும் ஐபோன் XR உள்ளிட்டவை வழக்கில் சேர்க்கப்படவில்லை.



குவால்காம் வழக்கில் தொடர்புடைய ஐபோன்கள் சீனாவில் விற்பனையாகும் மொத்த ஐபோன்களில் 15% பங்குகளை கொண்டிருக்கிறது. ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தும் சில தொழில்நுட்பங்களை எவ்வித கட்டணங்களையும் செலுத்தாமல் பயன்படுத்தியிருப்பதாக குவால்காம் குற்றஞ்சாட்டி இருக்கிறது.

இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் கூறும் போது, குவால்காம் நிறுவனத்தின் சட்டவிரோத நடவடிக்கைகள் உலகம் முழுக்க பல்வேறு ஒழுங்கமுறை ஆணையங்களில் விசாரிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளது.

குவால்காம் வழக்கு ஒருபுறம் இருக்க, ஆப்பிள் நிறுவன சாதனங்களின் சீன விற்பனை சரிந்து வருகிறது. ஹூவாய் மற்றும் ஒப்போ போன்ற உள்ளூர் நிறுவன சாதனங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதே ஆப்பிள் நிறுவன சாதனங்களின் விற்பனை குறைய காரணமாக கூறப்படுகிறது. #Apple #iPhone
Tags:    

Similar News