அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை சோனி நிறுவனம் வெளியிட இருக்கிறது.
சர்வதேச விழாவில் இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிடும் சோனி
பதிவு: ஜனவரி 18, 2017 21:13
டோக்கியோ:
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இந்த மாதம் நடைபெற்று முடிந்த நுகர்வோர் மின்சாதன விழாவினை தொடர்ந்து, பிப்ரவரி 27 ஆம் தேதி சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இதில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் சாதனங்களை அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.
மற்ற நிறுவனங்களை போன்றே சோனி நிறுவனமும் தனது சாதனங்களை வெளியிட தயாராகி வருகிறது. அந்த வகையில் சோனி நிறுவனம் மொபைல் காங்கிரஸ் விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களை விநியோகம் செய்துள்ளது.
சோனி வெளியிட்டுள்ள அழைப்பிதழ்களில் அந்நிறுவனம் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும் தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி சோனி நிறுவனம் இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
அந்த இரு ஸ்மார்ட்போன்களும் மீடியாடெக் ஹீலியோ P20 MT6757 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இவை G3112 மற்றும் G3221 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இரண்டு ஸ்மார்ட்போன்களும் ஆக்டாகோர் சிப்செட் கொண்டிருக்கும் என கூறப்பட்டது.
சோனி நிறுவனம் மட்டுமின்றி சாம்சங், நோக்கியா, மோட்டோரோலா, உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. பல்வேறு நிறுவனங்களும் தங்களின் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கும் நிலையில் தொழில்நுட்ப சந்தையில் பிரபல நிறுவனங்களின் சாதனங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.