செய்திகள்

அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான 50 சதவீத வரியை ஏற்க முடியாது- டிரம்ப்

Published On 2019-06-11 07:46 GMT   |   Update On 2019-06-11 10:01 GMT
அமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான இறக்குமதி வரியை 100 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இந்தியா குறைத்த நிலையில், இதையும் ஏற்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்  தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எனது தலைமையிலான அமெரிக்க நாட்டினை பிற நாட்டினர் இனியும் ஏமாற்ற விடமாட்டேன். மோடி தலைமையிலான இந்திய அரசு நமது நட்பு நாடுகளில் ஒன்று. ஆனால் அவர்கள் நமது பொருட்களை இறக்குமதி செய்யும் போது நம்மிடம் அதிக வரி வசூலிக்கிறார்கள். உதாரணத்துக்கு நாம் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினால் 100 சதவீதம் வரி விதித்தார்கள். ஆனால் இந்தியா ஒரு மோட்டார் சைக்கிளை அமெரிக்காவுக்கு அனுப்பினால், நாம் அவர்களிடம் வரி எதுவும் வசூலிப்பதில்லை.



இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யும் ஹார்ட்லி-டேவிட்சன் மோட்டார் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரிவிதிப்பது நியாயம் அற்றது என கூறினேன். அதன் காரணமாக பிரதமர் மோடி 100 சதவீத இறக்குமதி வரியிலிருந்து 50 சதவீதமாக குறைத்தார். இதுவும் அதிகம் தான், ஏற்றுக்கொள்ள முடியாதது.

நாங்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வரி விதிப்பதில்லை. அதே போல் அமெரிக்க மோட்டார் வாகனங்களுக்கு இந்தியா வரி விதிக்கக்கூடாது என மோடியிடம் தெரிவித்தேன். இது குறித்து விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடியுடன் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தொலைபேசியில் பேசினேன். அதில் 50 சதவீதம் அளவிற்கு இறக்குமதி வரி குறைக்கப்பட்டது. ஏனென்றால் அமெரிக்கா அத்தகைய பொருளாதார ரீதியாக அதிக வலிமை பெற்ற நாடாக திகழ்கிறது. ஒரு வேளை நாம் இத்தகைய வலிமை பெற்ற நாடாக இல்லாவிட்டால் எந்த நாடும் நம்முடைய கருத்துக்களை கேட்க கூடமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News