செய்திகள்

சூடானில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு- 13 பேர் பலி

Published On 2019-06-03 16:37 GMT   |   Update On 2019-06-03 16:37 GMT
சூடான் நாட்டில் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்கள் மீது ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
கர்த்தூம்:

சூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம்  தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். புதிய அதிபராக பதவியேற்ற ராணுவ தளபதியும், மக்களின் எதிர்ப்பு காரணமாக பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் சிவில் ஆட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போராட்டக் குழுவினருக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

கர்த்தூமில் உள்ள ராணுவ தலைமையகத்திற்கு வெளியிலும் போராட்டம் வெடித்தது. இந்த தர்ணா போராட்டம் சுமார் ஒரு வார காலம் நீடித்த நிலையில், இன்று ராணுவம் போராட்டக்காரர்களை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் துப்பாக்கி சூட நடத்தினர். இதில், குழந்தை உள்ளிட்ட 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.



அத்துடன் தலைநகர் கர்த்தூமில் உள்ள அனைத்து சாலைகளிலும் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஏராளமான அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

அதேசமயம் போராட்டக்காரர்கள் பல்வேறு சாலைகளில் கற்களை அடுக்கியும், மரங்களை வெட்டிப் போட்டும், டயர்களை கொளுத்திப் போட்டும் போக்குவரத்தை தடை செய்தனர். கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

போராட்டக்காரர்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. 
Tags:    

Similar News