செய்திகள்

அமெரிக்கா விசா பெற இனி சமூக வலைத்தளங்கள் பயன்பாடு பற்றி தெரிவிக்க வேண்டும்

Published On 2019-06-02 11:09 GMT   |   Update On 2019-06-02 11:09 GMT
அமெரிக்காவில் குடியேறவும் தங்கவும் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள் இனி சமூக வலைத்தளங்களில் தங்களது கணக்கு விபரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

நவீன தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாதிகள் சமூக வலைத்தளங்களை தங்களது நாசவேலைக்கான ஆள்சேர்க்கும் மையமாக மாற்றி வருகின்றனர்.

குறிப்பாக, ஈராக் மற்றும் சிரியாவில் முன்னர் ஆதிக்கம் செலுத்திய ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பலரை சமூக வலைத்தளங்களின் மூலம் தொடர்புகொண்டு அவர்களை மூளைச்சலவை செய்து தங்கள் நோக்கத்துக்காக பயன்படுத்திக் கொண்டனர்.

இதை எல்லாம் கவனித்த அரசு தங்கள் நாட்டில் குடியேறவும் தங்கவும் விசா கேட்டு விண்ணப்பிப்பவர்கள்  சமூக வலைத்தளங்களில் தங்களது கணக்கு (ஐ.டி.) விபரங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்னும் புதிய கட்டுப்பாட்டை கொண்டுவர கடந்த ஆண்டு திட்டமிட்டது.

இந்நிலையில், இனி விசா கேட்டு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் தங்களைப்பற்றிய தகவல்களுடன் தாங்கள் உபயோகிக்கும் சமூக வலைத்தளங்களின் விபரங்கள் மற்றும் அவற்றில் எந்த அடையாளப் பெயருடன் (ஐ.டி.) அவர்களின் பயன்பாடு அமைந்துள்ளது என்பன உள்ளிட்ட விபரங்களையும் கட்டாயமாக தெரிவிக்க வேண்டும் என்ற நிபந்தனை நேற்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாதவர்களாக இருக்கும் நபர்கள் அதையும் தங்களது விசா விண்ணப்பத்தில் குறிப்பிட்டாக வேண்டும். இதில் பொய்யான தகவல்களை அளித்து விசா பெற முயற்சிப்பவர்கள் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிற்காலத்தில் இணையதளங்களில் அவர்கள் அதிகம் பயன்படுத்தும் இணைய இணைப்புகள் தொடர்பான விபரங்களையும் இணைக்க வேண்டியிருக்கும் என தெரிகிறது.

இந்த புதிய நிபந்தனை தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்க குடியுரிமைத்துறை உயரதிகாரி ஒருவர், ‘சமீபகாலமாக பயங்கரவாதிகளின் செயல்பாடுகளுக்கு சமூக வலைத்தளங்கள் மிகப்பெரிய உறுதுணையாக இருந்துள்ளதை நாம் பார்த்து வந்திருக்கிறோம்.

இந்த புதிய நிபந்தனையின் மூலம் அமெரிக்க மண்ணில் அவர்கள் கால்பதிக்கும் முன்னதாகவே பயங்கரவாதிகளை கண்டறியவும், எங்கள் நாட்டு பொதுமக்களின் உயிர், உடைமைகளுக்கான அச்சுறுத்தலை கண்டுபிடித்து விடவும் முடியும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News