செய்திகள்

இலங்கையில் தாக்குதல் நடத்திய 9 மனித வெடிகுண்டுகளின் அடையாளம் தெரிந்தது

Published On 2019-05-23 00:33 GMT   |   Update On 2019-05-23 00:33 GMT
இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்திய 9 மனித வெடிகுண்டுகள், அடையாளம் காணப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கொழும்பு:

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற பயங்கரவாத அமைப்பு, இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. ஒரு பெண் உள்பட 9 பேர் மனித வெடிகுண்டுகளாக செயல்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த மனித வெடிகுண்டுகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு இருப்பதாக இலங்கை போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸ் செய்தித்தொடர்பாளர் ருவன் குணசேகரா கூறியதாவது:-

எல்லா மனித வெடிகுண்டுகளும் மரபணு சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மனித வெடிகுண்டுகளில், தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவராக இருந்த முகமது ஜஹ்ரானும் ஒருவர் என்பதும் இந்த சோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஷாங்கிரி லா ஓட்டலில் குண்டு வெடிப்பை நிகழ்த்திவிட்டு பலியானார்.

தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் 89 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சி.ஐ.டி. போலீசார் மற்றும் பயங்கரவாத புலனாய்வு துறையினரின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

சந்தேகத்துக்குரிய மேலும் பலரை பிடிப்பதற்காக நாடு முழுவதும் சோதனை நடந்து வருகிறது. இருப்பினும், பெரும்பாலானவர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News