செய்திகள்

மாலத்தீவு முன்னாள் அதிபரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் சிறை தண்டனை ரத்து

Published On 2019-05-20 15:35 GMT   |   Update On 2019-05-20 15:35 GMT
மாலத்தீவு முன்னாள் அதிபர் அப்துல் கய்யூம் சென்ற அதிவேகப் படகை வெடிகுண்டால் தகர்த்து அவரை கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் துணை அதிபரின் 18 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்தது.
மாலே:

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

டெல்லியில் இருந்து 28-9-2015 அன்று காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் படுகாயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகுமூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்தார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்-புக்கும் தொடர்பு இருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.



இதைதொடர்ந்து, துணை அதிபர் அஹமத் அடிப் கைது செய்யப்பட்டார். அதிபரை கொல்ல சதி செய்ததாக அவர்மீது தொடரப்பட்ட குற்ற வழக்கில் அவருக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் தண்டனைக்காலம் 18 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. கடந்த மூன்றாண்டுகளாக அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த தண்டனையை எதிர்த்து அஹமத் அடிப் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் அவரை சிறையில் விடுதலை செய்யுமாறு மாலத்தீவு உயர்நீதி மன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், குற்றவியல் நீதிமன்றம் முன்னர் விதித்த தண்டனையை ரத்து செய்வதுடன் அதிபரின் படகு வெடித்த விபத்து தொடர்பாக மீண்டும் புதிதாக கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
Tags:    

Similar News