செய்திகள்

வெளிநாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பு - 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க டிரம்ப் முடிவு

Published On 2019-05-17 14:58 GMT   |   Update On 2019-05-17 14:58 GMT
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் வாகனங்கள் மீது 25 சதவீத வரிவிதிப்பு என்ற முடிவை 6 மாதங்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களுக்கு சீனா, இந்தியா, ஜப்பான், கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏராளமாக இறக்குமதி வரிவிதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் இரும்பு, அலுமினியம் ஆகிய உலோகங்களுக்கான வரியை பன்மடங்காக உயர்த்தி சமீபத்தில் உத்தரவிட்டார்.

மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைமதிப்பில் 25 சதவீதம் தொகையை நாங்கள் வரியாக விதிப்போம் என அவர் எச்சரித்திருந்தார். வெளிநாட்டு நிறுவனங்களின் நியாயமற்ற போட்டியால் அமெரிக்காவில் வாகன உற்பத்தி தொழில் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த புதிய வரிவிதிப்பு முறையை தற்காலிகமாக தள்ளிவைத்துள்ள டிரம்ப், இதுதொடர்பாக, வர்த்தக பிரதிநிதிகள் கலந்துபேசி இன்னும் 180 நாட்களுக்குள் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன் என இன்று தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News