செய்திகள்

லண்டனில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்த இந்திய வாலிபருக்கு சிறை

Published On 2019-05-17 06:54 GMT   |   Update On 2019-05-17 06:54 GMT
லண்டனில் இளம் பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததால் இந்தியாவைச் சேர்ந்த வாலிபருக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
லண்டன்:

லண்டனில் வசிப்பவர் ரோகித் சர்மா(28). இவர் இந்தியாவைச் சேர்ந்தவராவார். லண்டனில் ஒரு கடையில் வேலை செய்யும் பெண்ணை கண்டு, காதல் வயப்பட்டுள்ளார். அன்று முதல் ஓராண்டுக்கும் மேலாக  அப்பெண் எங்கு சென்றாலும் பின் தொடர்வதையே வேலையாக பார்த்துள்ளார்.

இதனை கண்டு கொள்ளாமல் அந்த பெண் பொறுமையாக இருந்து வந்துள்ளார். பின்னர் சமீபத்தில் அப்பெண்ணுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுத்து மிரட்டியும் உள்ளார். இதனால் அப்பெண் ரோகித் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த புகாரை விசாரித்த காவல் அதிகாரி கூறுகையில், ‘2017ம் ஆண்டு அந்த பெண் கடையில் வேலை பார்த்தபோது ரோகித் அங்கேயே  பேசினார். அன்று மாலையே அவரது தந்தையுடன் வந்து, அப்பெண்ணை சந்தித்து தன்னை திருமணம் செய்ய சம்மதிக்குமாறு கூறியுள்ளார். இந்த தொல்லை தாங்க முடியாமல் வேறு கடைக்கு அப்பெண் மாறினார்.



அப்போதும் விடாத ரோகித், எப்படியோ அலைந்து திரிந்து அந்த பெண் வேலை பார்க்கும் வேறொரு கடையையும், அப்பெண்ணின் செல்போன் நம்பரையும் கண்டுபிடித்து விட்டார். நாள் ஒன்றுக்கு 40க்கும் மேற்பட்ட போன்கால்கள், எண்ணற்ற குறுஞ்செய்திகள் அனுப்பி தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார்.

ரோகித்தின் இந்த தொந்தரவினால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண் மீண்டும் மற்றொரு கடைக்கு மாறியும் எந்த பயனும் இல்லை. அங்கும் ரோகித் வந்து தொந்தரவு செய்துள்ளார்’ என கூறினார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி ரோகித்தை போலீசார் கைது செய்தனர். ரோகித் மீது பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில்,  பாலியல் தொந்தரவு பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று முன்தினம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ரோகித்துக்கு 29 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளனர்.


Tags:    

Similar News