செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை- இம்ரான்கான் ஒப்புதல்

Published On 2019-04-24 07:51 GMT   |   Update On 2019-04-24 07:51 GMT
பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவது உண்மை என்று கூறிய பிரதமர் இம்ரான் கான் கருத்துக்கு கண்டனம் எழுந்துள்ளது. #Imrankhan
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறை பயணமாக ஈரான் சென்று இருந்தார். அப்போது தெக்ரானில் ஈரான் அதிபர் ஹசன் ரக்கானியுடன் கூட்டாக பேட்டி அளித்தார்.

அப்போது, “பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் ஈரான் மிகவும் பாதிக்கப்படுவதை நான் அறிவேன். பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதை ஈரானும், பாகிஸ்தானும் விரும்பவில்லை. அதில் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கிறோம்.

இரு நாடுகளிடையே நல்ல நிலையும், நட்பையும் உருவாக்கும் என நம்புகிறோம்” என்றார். இவரது இக்கருத்துக்கு பாகிஸ்தான் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி தலைவர் குர்ரம் தஸ்தகீர் கூறும்போது, “பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதாக பிரதமர் கூறியிருப்பது முதன் முறையாக நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானது.

வெளிநாட்டு மண்ணில் இருந்து கொண்டு இத்தகைய ஒப்புதல் வாக்குமூலத்தை இதுவரை எந்த பிரதமரும் அளித்தது இல்லை. இந்த அறிக்கை மூலம் பிரதமர் இம்ரான்கான் ராஜ்ய ரீதியிலான மிகப்பெரிய தவறை செய்துவிட்டார். நாட்டின் பாதுகாப்புக்கு ஊறு இழைத்துவிட்டார். இதற்குமுன்பு இந்திய பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மோடி பிரதமரானால் தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என முரண்பாடான கருத்து கூறினார்” என்றார்.

முன்னாள் வெளியுறவு மந்திரியும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் எம்.பி.யுமான ஹினா ரப்பானி கூறும்போது, ‘இம்ரான்கான் இதுபோன்று கேலிக்கூத்தான கருத்துக்களை தொடர்ந்து கூறுவதால் நாட்டை பற்றிய எங்களின் கவலை அதிகரித்துள்ளது’ என்றார். #Imrankhan
Tags:    

Similar News