செய்திகள்

கருக்கலைப்பு தடைச்சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது - தென்கொரியா கோர்ட்டு தீர்ப்பு

Published On 2019-04-11 22:15 GMT   |   Update On 2019-04-11 22:15 GMT
66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரியா அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. #SouthKorea #AbortionBan
சியோல்:

தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு வளர்ந்த நாடுகளில் கருக்கலைப்பு என்பது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமலில் உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் டாக்டர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.

அதே சமயம் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டதால் கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக அங்கு போராட்டம் நடந்து வந்தது.

இந்த நிலையில், திடீர் திருப்பமாக கருக் கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.

அடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்றும், அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமைக்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கருக்கலைப்பு தடைச்சட்டத்தை எதிர்த்து போராடி வந்த பெண்ணுரிமை ஆர்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை கொண்டாடி வருகிறார்கள்.  #SouthKorea #AbortionBan
Tags:    

Similar News