செய்திகள்

உலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா - ஈரான் அதிபர் குற்றச்சாட்டு

Published On 2019-04-09 08:07 GMT   |   Update On 2019-04-09 08:07 GMT
உலக பயங்கரவாதத்தின் தலைமையாக விளங்கும் அமெரிக்கா எங்கள் நாட்டு ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்துவதா? என ஈரான் அதிபர் ரவுஹானி சீறியுள்ளார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
டெஹ்ரான்:

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் தங்கள் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
 
அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம். எங்கள் நாட்டின் சுதந்திரத்தையும், இஸ்லாமிய நன்முறைகளையும் பாதுகாக்க ஒருநாளும் தவற மாட்டோம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

சில இடங்களில் ஈரான் அரசு ரகசியமாக அணு உலைகளை அமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டி வருகிறது.



இதற்கிடையில், ஈரான் நாட்டின் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இதற்கு ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஈரான் மக்களிடையே தொலைக்காட்சி மூலம் இன்று உரையாற்றிய ரவுஹானி, ‘எங்கள் நாட்டின் புரட்சிகர படைகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்த நீங்கள் (அமெரிக்கா) யார்? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

எங்கள் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத குழுக்களை கருவியாக பயன்படுத்தும் நீங்கள்தான் உலக பயங்கரவாதத்தின் தலைமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். #UStheleader #Worldterrorism #Rouhani #Trump #IRG
Tags:    

Similar News