செய்திகள்

‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது 4-வது முறையாக ஓட்டெடுப்பா? - தெரசா மே பரிசீலனை

Published On 2019-03-30 21:43 GMT   |   Update On 2019-03-30 21:43 GMT
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலிக்கிறார். #TheresaMay #BrexitDeal
லண்டன்:

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையில் இழுபறி நிலை நீடிக்கிறது.

2016-ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்புக்கு பின்னர் பிரதமர் பதவிக்கு வந்த தெரசா மே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை தொடங்கினார்.

இதையொட்டி ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் ஒரு ஒப்பந்தம் போட்டார். இந்த ஒப்பந்தம் முதன்முதலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் வந்தபோது வரலாற்று தோல்வியை சந்தித்தது. 230 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தெரசா மேயின் அந்த ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் தோல்வி அடைந்தது நினைவுகூரத்தக்கது. 15 நாட்களுக்கு முன்பாக 2-வது முறையும் ஒப்பந்தம் தோல்வியைத் தழுவியது.



இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பின்னர், இரு தரப்பினரிடையே சிறப்பு வர்த்தக உறவை ஏற்படுத்திக்கொள்வதற்கான ஒப்பந்தம், மூன்றாம் முறையாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தோல்வியை தழுவியது.

ஒப்பந்தத்தை ஆதரித்து 344 ஓட்டுகளும், எதிர்த்து 286 ஓட்டுகளும் விழுந்தன. இது தெரசா மேயுக்கு தலைவலியாக உருவாகி உள்ளது. ஒப்பந்தம் நிறைவேறி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதும் பதவி விலகுகிறேன் என அவர் உறுதி அளித்தும்கூட இந்த விவகாரத்தில் இங்கிலாந்து எம்.பி.க்கள் அவர் பக்கம் இல்லை என்பது நிரூபணமாகி உள்ளது.

இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கான ஒப்பந்தத்தை 4-வது முறையாக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து ஓட்டெடுப்பு நடத்துவதற்கான வழிவகைகளை பிரதமர் தெரசா மேயும், மந்திரிகளும் ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று முன்தினம் ஒப்பந்தம் தோல்வியை தழுவிய பின்னர் பேசிய பிரதமர் தெரசா மே, இங்கிலாந்துக்கு மாற்றுவழி தேவைப்படுகிறது என கூறியது நினைவுகூரத்தக்கது.

எதிர்க்கட்சியான தொழிற்கட்சி தலைவர் ஜெரேமி கார்பைன், “ஒன்று தெரசா மே தனது திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அவர் உடனே பதவி விலக வேண்டும்” என வலியுறுத்தி வருகிறார்.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் அதிருப்தி எம்.பி.க்கள் 34 பேரின் ஆதரவை பெறும் முயற்சியில் அரசு இதுவரை தோல்வியைத்தான் கண்டு வருகிறது. ஆனாலும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவை பெறுவதற்கு பிரதமர் தெரசா மே முயற்சிப்பார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேறுவதை தவிர்க்கும் வகையில் பேச்சுவார்த்தையை நீட்டிப்பதற்கு தெரசா மேயுக்கு ஏப்ரல் 12-ந் தேதி வரை அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #TheresaMay #BrexitDeal
Tags:    

Similar News