செய்திகள்

மல்லையாவுக்கு முன்பே நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர திட்டம்

Published On 2019-03-21 11:39 GMT   |   Update On 2019-03-21 11:39 GMT
ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து வர திட்டமிடப்பட்டுள்ளது. #NiravModi
லண்டன்:

மும்பை வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகில் கோக்‌ஷி ஆகியோர் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடியை மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடினார்கள்.

இதில் நிரவ்மோடி சில மாதங்களாக பல நாடுகளுக்கு சென்று தலைமறைவாக இருந்தார்.

கடைசியாக இங்கிலாந்து வந்த அவர் லண்டனில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டுவர மத்திய அரசு முயற்சித்தது. இதற்கான சட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

அவருக்கு லண்டன் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. அதை ஏற்று அவர் ஆஜர் ஆகவில்லை. இதனால் கோர்ட்டு உத்தரவின்படி அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.

அவர் உடனடியாக விடுவிக்கும்படி கோர்ட்டில் ஜாமீன் கேட்டார். ஆனால் நீதிபதி ஜாமீனில் விடுவிக்க மறுத்து விட்டார். 26-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை முறைப்படி நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சட்ட நடைமுறைகள் விரைவில் தொடங்க உள்ளன. நிரவ்மோடி முறைகேடு செய்ததற்கான பல ஆதாரங்கள் இந்தியா தரப்பில் இருந்து இங்கிலாந்திடம் கொடுக்கப்பட்டுள்ளன.

நிரவ்மோடி மீது சி.பி.ஐ., அமலாக்க பிரிவு ஆகியவை தனித்தனியாக வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த 2 அமைப்புகளுமே ஏராளமான மோசடி ஆதாரங்களை திரட்டி உள்ளன. அதைவைத்து நிரவ்மோடியை எளிதாக இந்தியா கொண்டு வந்து விடலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.

இதே போன்று மோசடி செய்து லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வர முயற்சி நடந்தது. ஆனால் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவரை இந்தியா கொண்டு வருவதற்கு தாமதமாகி வருகிறது.

ஆனால் நிரவ் மோடியை பொறுத்தவரை ஏராளமான ஆதாரங்கள் இருப்பதால் விஜய்மல்லையாவுக்கு முன்னதாகவே நிரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விடலாம் என்று நினைக்கின்றனர்.

இதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து எடுக்கும். எனவே 6 மாத காலத்துக்குள் நிரவ் மோடி இந்தியா கொண்டு வரப்பட வாய்ப்பு ஏற்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #NiravModi
Tags:    

Similar News