செய்திகள்

மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் - மோடி வலியுறுத்தல்

Published On 2019-02-22 09:02 GMT   |   Update On 2019-02-22 09:02 GMT
மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். #joinhands #joinhandsunite #eradicateterrorist #ModiinSKorea
சியோல்:

இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியதற்காகவும், பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உலக அமைதிக்குப் பங்களிப்பை வழங்கியமைக்காகவும், பிரதமர் நரேந்திர மோடிக்கு, தென் கொரிய நாட்டின் உயரிய விருதான ’சியோல் அமைதி விருது’ சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.  

தற்போது அரசுமுறைப் பயணமாக தென்கொரியா வந்துள்ள பிரதமர் மோடிக்கு இன்று சியோல் அமைதி விருது வழங்கப்பட்டது.

இவ்விருதுக்கு தன்னை தேர்வு செய்தமைக்காக தென்கொரியா அரசுக்கு நன்றி தெர்வித்த மோடி, இந்த விருது தனிப்பட்ட முறையில் தனக்காக வழங்கப்பட்டது இல்லை என்றும், 130 கோடி இந்தியர்களுக்கான விருதாக எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விருதுடன் அளிக்கப்பட்ட ரொக்கப்பரிசான 2 லட்சம் டாலர்களை இந்தியாவில் கங்கை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிக்கு நன்கொடையாக அளிப்பதாகவும் அறிவித்தார்.



பகைநாடான வடகொரியாவுடன் நட்புறவை ஏற்படுத்தியதுடன் சர்வதேச அரங்கில் வடகொரியா மீதான வெறுப்புணர்வை நீக்கும் வகையில் அந்நாட்டை பேச்சுவார்த்தையின் பக்கம் அழைத்துச் சென்ற தென்கொரியா அதிபர் மூன் ஜே-இன் ஆற்றிய பணியை மோடி பாராட்டினார். இது சாதாரணமான காரியமல்ல, இதன் மூலம் கொரியா தீபகற்பத்தில் விரைவில் அமைதி நிலவும் என்றும் அவர் தெரிவித்தார்.

1988-ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியபோது அல் கொய்தா என்ற பயங்கரவாத இயக்கம் தொடங்கப்பட்டது. இன்று மதவாதம் மற்றும் பயங்கரவாதம் என்பது உலகின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இப்போது, பயங்கரவாத அமைப்புகளை முற்றிலுமாக ஒழிப்பதற்கான நேரம் வந்து விட்டது. மனிதநேயத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக கைகோர்த்து பயங்கரவாதத்தை ஒழிக்க முன்வர வேண்டும். இதன் மூலமாக மட்டுமே வெறுப்புணர்வை போக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

1988-ம் ஆண்டில் சியோல் ஒலிம்பிக் போட்டியின்போது இசைக்கப்பட்ட பாடலை நான் இந்த வேளையில் நினைவுப்படுத்த விரும்புகிறேன். கையோடு கைகள் இணைந்து இந்த பூமிப்பந்தில் வாழும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நிற்போம். இந்த உலகத்தை நாம் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்றிடுவோம் என்ற அந்த பாடலின் வரிகளுக்கேற்ப நாம் செயலாற்ற வேண்டிய வேளை இப்போது வந்து விட்டது எனவும் மோடி தெரிவித்தார்.  #joinhands #joinhandsunite #eradicateterrorist #ModiinSKorea
Tags:    

Similar News