செய்திகள்

இந்தோனேசியாவில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண்ணுக்கு 6 மாதம் சிறை

Published On 2019-02-07 10:54 GMT   |   Update On 2019-02-07 10:54 GMT
இந்தோனேசியாவில் விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரியை அறைந்த பிரிட்டன் பெண் கைது செய்யப்பட்டு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #BritishWomanJailed
பாலி:

இந்தோனேசியாவில் உள்ள பாலி சர்வதேச விமான நிலையத்தில், குடியேற்ற அதிகாரியாக பணிபுரிபவர் குரா ராய்.  இவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பிரிட்டிஷ் பெண் பயணி ஆஜ்-இ தாகத்தாஸ் (42) என்பவரின் விசா, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை சரிபார்த்தார். அப்போது அந்த பெண்ணின் விசா காலம் முடிந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விசா காலம் முடிந்து கூடுதல் நாட்கள் தங்கியிருந்ததற்கு அபராதம் செலுத்த வேண்டும் என அதிகாரி கூறினார். இதனால் அவருக்கும் அந்த பெண்ணிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இறுதியாக அந்த பெண் குடியேற்ற அதிகாரியை அறைந்து விட்டு, அவரிடம் இருந்து பாஸ்போர்ட்டை பறித்துச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், இவர் பாலியில் விசாவில் குறிப்பிடப்பட்டிருந்த தேதியை விட 160 நாட்கள் அதிகமாக தங்கியுள்ளார் என்பது தெரியவந்தது.  இதையடுத்து அவருக்கு 3,500 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டபோது, ​​கடுமையாக பேசியுள்ளார்.

கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி பலமுறை கூறியபோதும், அந்த பெண் வர மறுத்துள்ளார். எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்து, கட்டாயம் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, வேறு வழியின்றி அவர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து தன்பாட்சர் கோர்ட்டில் தாகத்தாஸ் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். #BritishWomanJailed
Tags:    

Similar News