செய்திகள்

சீனாவின் ஆய்வில் முன்னேற்றம்- நிலவுக்கு அனுப்பிய பருத்தி விதை முளைத்தது

Published On 2019-01-16 02:39 GMT   |   Update On 2019-01-16 02:39 GMT
நிலவின் மறுபக்கத்திற்கு சீனா அனுப்பிய விண்கலத்தில் இருந்த பருத்தி விதை முளைக்க தொடங்கியுள்ளது. #ChangE4 #lunarlander #moon
சீனாவின் விண்வெளி ஆய்வு நிலையம் கடந்த சில நாட்களுக்கு முன் சாங் இ-4 என்ற விண்கலம் அனுப்பி உள்ள நிலையில், அதன் மூலம் நிலவின் குளிர்நிலையை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நிலவின் பின் பகுதியை யாராலும் பார்க்க முடிவதில்லை. இது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் உலக நாடுகள் செய்து வந்தாலும் நிலவின் பின்பகுதியை ஆய்வு செய்வது குறித்து முதலில் தொடங்கியது சீனாதான்.

இதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி சாங் இ-4 என்ற விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அந்த விண்கலம் இந்த மாதம் 3ஆம் தேதி நிலவின் இருண்ட பகுதி என்று கூறப்படும் யாரும் பார்த்திராத பகுதியில் இறங்கியது. நிலவின் மறுப்பக்கத்தில் யாரும் இதுவரை கண்டிராத புகைப்படங்களை சீன விண்வெளி மையத்திற்கு அனுப்பியது.

நிலவில் பூமியை போல் இல்லாமல் சற்று மாறுபட்டே கால சூழல் அமைகிறது. அதாவது பூமியின் கணக்குபடி 14 நாட்கள் இரவாகவும், 14 நாட்கள் பகலாகவும் நிலவில் இருக்கும்.

பகலில் அதிக வெப்பமாகவும் இரவில் கடும் குளிராகவும் இருக்கும். அதாவது விஞ்ஞானிகளின் கணக்குபடி பகலில் 127டிகிரி செல்சியஸ் வெப்பமாகவும், இரவில் -183 டிகிரி செல்சியஸ் உறை பனியாகவும் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

மேலும் விண்கலம் பழுதடையாமல் இருக்க அதில் உள்ள வெப்ப மூட்டிகள் தொடர்ந்து இயக்கப்படும் என்றும், அந்த கருவிகள் உருவாக்கும் மின்சக்திகள் பெற்று நிலவின் குளிர் நிலையை துல்லியமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் விண்வெளி ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.



அங்கு உயிர் வாழ்வதற்கான சூழ்நிலை இருக்கின்றதா என்றும் ஆய்வுகள் நடக்கின்றது. இதற்காக தனது விண்கலனை வித்தியாசமான முறையில் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. புதிய பரிமாணத்தில் ஆய்வும் நடந்து வருகின்றது.

நிலவின் மறுபக்கத்தில் உள்ள பெருங்குழியில் ஆய்வு நடைபெறுவதாகவும், இந்த ஆய்வில், நிலாவின் தரையில் என்னென்ன தனிமங்கள் உள்ளன, அங்கு கதிர் வீச்சு எப்படி உள்ளது, சூழல் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் ஆராய்ந்து வருவதாக சீன விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்

ஆய்வு செய்து வரும் பணிகளை தனது விண்கலன்கள் மூலம் நேரலையில் சீனா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். இது விண்வெளி ஆய்வில் வித்தியாசமான முயற்சியாகவும் இருந்து வருகின்றது.

நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, பருத்தி விதைகள், மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

சீனா சாங் இ-4 மூலம் ஆய்வுக்காக  கொண்டு சென்ற பருத்தி விதைகள் முளைக்க ஆரம்பித்து உள்ளன.

சாங் இ-4 எடுத்து அனுப்பிய புகைப்படங்களில், பருத்தி விதை முளைக்க தொடங்கி உள்ளதை காட்டியது, ஆனால் வேறு எந்த தாவரங்களும் முளைப்பது காணப்படவில்லை. இதுவரை 170 க்கும் மேற்பட்ட படங்கள் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டு உள்ளது என இந்த குழு கூறி உள்ளது. #ChangE4 #lunarlander #moon
Tags:    

Similar News