செய்திகள்

பிலிப்பைன்சில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரிப்பு

Published On 2019-01-01 16:56 GMT   |   Update On 2019-01-01 16:56 GMT
பிலிப்பைன்சில் கொட்டித் தீர்த்த கனமழையை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. #PhilippinesFloods
மணிலா:

பிலிப்பைன்சில் ஆண்டுதோறும் 20 புயல்கள் உருவாகின்றன. இதனால் பெய்துவரும் கனமழையில் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள பிகோல் மற்றும் கிழக்கு விசயாஸ் பிராந்தியங்களில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்து உள்ளன.

கனமழையால் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்து வெள்ளம் கரை புரண்டோடுகிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.



மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து அனேக இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணோடு மண்ணாக புதைந்தன. அனேக இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பல்வேறு நகரங்கள் இருளில் மூழ்கின. தகவல் சேவை தொடர்பு முடங்கியது.

நிலச்சரிவு மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மாயமான 16 பேரை தேடும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம், நிலச்சரிவால் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருப்பதாக பேரழிவு மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. #PhilippinesFloods
Tags:    

Similar News