செய்திகள்

மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்திப்பு

Published On 2018-11-21 17:37 GMT   |   Update On 2018-11-21 17:37 GMT
மலேசியா பிரதமர் மஹதிர் முஹம்மதுவை இன்று சந்தித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது நாட்டை மீள்கட்டமைப்பு செய்ய அந்நாட்டின் பொருளாதார கொள்கையை கடைபிடிப்பதாக தெரிவித்தார். #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
கோலாலம்பூர்:

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற இம்ரான் கான் அந்நாடு ஏராளமான நிதிச்சுமையில் சிக்கி தவிப்பதாக தெரிவித்தார். 

உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் சில நாடுகளிடம் இருந்து கடன் பெற்று, நலிவடைந்த பொருளாதார நிலையில் இருந்து நாட்டை முன்னேற்றுவதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். அரசு தரப்பில் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் அளவுக்கு நிதிச்சுமையில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் இந்த ஆண்டுக்கான அரசு செலவினங்களுக்கு மட்டும் 1200 கோடி டாலர்கள் பணம் தேவைப்படும் நிலையில் சமீபத்தில் இம்ரான் கான் சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றார். 

பாகிஸ்தான் நாட்டுக்கு கடனுதவியாக 600 கோடி டாலர்களை அளிக்க சவுதி அரசு முன்வந்துள்ளது. 

இதேபோல் நிதி திரட்டும் நோக்கத்துடன் 4 நாள் பயணமாக கடந்த வாரம் சீனாவுக்கு சென்ற இம்ரான் கான், சீன பிரதமர் லீ கெகியாங்-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பாகிஸ்தானுக்கு சீனா 600 கோடி டாலர் நிதி உதவி வழங்க முன்வந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கு மேலும் சுமார் 600 கோடி டாலர்கள் நிதி திரட்டும் நோக்கத்தில் இம்ரான் கான் கடந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும்  சென்றார். 

இந்நிலையில், அடுத்தகட்டமாக இருநாள் அரசுமுறை பயணமாக மலேசியாவுக்கு வந்துள்ள இம்ரான் கான் இன்று கோலாலம்பூர் நகரில் அந்நாட்டின் பிரதமர் மஹதிர் முஹம்மதுவை சந்தித்துப் பேசினார்.

பின்னர் அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இம்ரான் கான், (மஹதிர்) உங்களைப் போலவே ஊழல் ஒழிப்பை மையப்படுத்தி நானும் மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறேன். கடன் சுமையில் இருந்து பாகிஸ்தானை விடுவிப்பதற்காக மலேசியாவின் முன்னேற்றப் பாதையை நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்று தெரிவித்தார். 

குறிப்பாக, மலேசியா பிரதமராக மஹதிர் முஹம்மது(93) பொறுப்பேற்ற பின்னர்  தனிநபர் வருமானம், உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றை அதிகரிக்கச் செய்து, இந்நாட்டை பொருளாதார ரீதியாகவும், முன்னேற்றிய அவரது அனுபவத்தின் மூலமாக அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் எனவும் இம்ரான் கான் குறிப்பிட்டார்.

மேலும், மலேசியா நாட்டின் ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை அலுவலகத்தையும் இம்ரான் கான் இன்று சென்று பார்வையிட்டார். 

இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட 51 ஆண்டுகால வரலாற்றில் இந்த அலுவலகத்துக்கு வருகைதந்த முதல் வெளிநாட்டு பிரதமர் என்ற முறையில் இம்ரான் கானை மலேசியா ஊழல் ஒழிப்பு கண்காணிப்பகத்தின் தலைமை ஆணையாளர் முஹம்மது ஷுக்ரி அப்துல் வரவேற்று இந்த அமைப்பு இயங்கிவரும் முறைபற்றி விளக்கம் அளித்தார்.

ஊழல் தொடர்பாக இந்த அமைப்பு நடவடிக்கை எடுப்பதற்கு ஏதும் பண உச்சவரம்பு உள்ளதா? என்ற இம்ரான் கானின் சந்தேகத்துக்கு பதில் அளித்த அவர், 5 ரிங்கிட் (இந்திய மதிப்புக்கு 85 ரூபாய்) ஊழல் என்றாலும் நாங்கள் விசாரணை நடத்த உரிமை உண்டு என்று விளக்கம் அளித்தார்.

நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் தொடர்பான புகார்களை விசாரிக்கவும் உங்களுக்கு அதிகாரம் உண்டா? என்ற இம்ரான் கானின் மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த முஹம்மது ஷுக்ரி அப்துல், எங்கள் நாட்டின் சட்டத்தின்முன் அனைவரும் சமம். நாங்கள் யாருக்கும் பாரபட்சம் பார்ப்பதில்லை. 

தேவைப்பட்டால் உங்கள் நாட்டின் (பாகிஸ்தான்) ஊழல் ஒழிப்புத்துறை அதிகாரிகளை எங்களிடம் அனுப்பி வையுங்கள். அவர்களுக்கு பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #ImranKhan #MahathirMohamad #ImranmeetsMahathirMohamad
Tags:    

Similar News