செய்திகள்

ஈராக்கில் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்

Published On 2018-11-08 09:44 GMT   |   Update On 2018-11-08 09:44 GMT
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 12 ஆயிரம் பேரை கொன்று புதைத்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது. #ISIS
பாக்தாத்:

ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியா மற்றும் ஈராக்கின் பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

ஈராக்குக்குள் 2014-ம் ஆண்டு அவர்கள் புகுந்தனர். படிப்படியாக நாட்டின் பெரும்பாலான பகுதிகள் அவர்கள் கைவசம் சென்றன. அப்போது அவர்களுக்கு எதிரான நபர்களை கொன்று குவித்தார்கள்.

ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த இடங்களை மீட்பதற்காக ஈராக் ராணுவம் அமெரிக்கா உதவியுடன் போராடியது. சில மாதங்களுக்கு முற்றிலும் மீட்கப்பட்டது. தற்போது ஐ.எஸ். பயங்கரவாதிகள் சிரியாவில் மட்டும் சில பகுதிகளை தங்கள் வசப்படுத்தி வைத்துள்ளனர்.

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்த பகுதிகளில் தற்போது ஆய்வுகள் நடந்து வருகின்றன.

அப்போது அவர்கள் கொன்று குவித்த நபர்களை புதைத்த இடங்கள் கண்டு பிடிக்கப்பட்டது. சுமார் 200 இடங்களில் புதை குழிகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஒவ்வொது புதை குழிக்குள்ளும் நூற்றுக்கணக்கான நபர்களை புதைத்துள்ளனர்.

நினிவே, கிர்குக், சலாவுதீன், அன்பார் பிராந்தியங்களில் இந்த புதைக்குழிகள் இருக்கின்றன. அதில் கஸ்பா சின்கோல் என்ற இடத்தில் மட்டுமே 6 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு 200 புதைகுழிகளிலும் சேர்த்து சுமார் 12 ஆயிரம் பேர் புதைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் யார், என்பதை கண்டுபிடிக்கும் முயற்சி நடக்கிறது. பல இடங்களில் புதைகுழிகள் சரியாக மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளன. புதைகப்பட்டவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் இருக்கிறார்கள்.

காணாமல் போனவர்கள் யார்? அவர்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கிறார்களா? என்பது பற்றியும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். #ISIS
Tags:    

Similar News