அமெரிக்க நிதி நிறுவனங்களில் இருந்து சுமார் 10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷியாவை சேர்ந்த ஹேக்கர் ஜார்ஜியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷிய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்
பதிவு: செப்டம்பர் 08, 2018 03:28
வாஷிங்டன் :
அமெரிக்காவின் மான் ஹாட்டன் நகரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 10 கோடி வாடிக்கையளர்களின் தகவல்கள் கடந்த 2015-ம் ஆண்டு திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்க வரலாற்றில் நடைபெற்ற மிகப்பெரிய தகவல் திருட்டு சம்பவமாக இது கருதப்படுகிறது. பின்னர் அமெரிக்கா, இந்த தகவல்களை திருடியது ரஷியாவை சேர்ந்த ஆன்ரேய் டியூரின்(35) எனும் ஹேக்கர் என்பதை கண்டுபிடித்தது. ஆனால், அவரை பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்காததால் கைது செய்ய முடியாமல் திணறி வந்தது.
திருடிய தகவல்களை வைத்து முறைகேடான முறையில் மில்லியன் கணக்கான அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டிய ஆன்ரேய் டியூரின், அவற்றை பங்கு சந்தை, ஆன்லைன் சூதாட்டம் போன்றவற்றில் செலவழித்துள்ளார். மேலும், அடுத்தவர்களின் தகவல்களை பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.
பல்வேறு சர்வதேச ஹேக்கிங் பிரச்சாரங்களில் பங்கேற்று, மேலும் பல நிதி நிறுவனங்களிலும் திருட்டில் ஈடுபட்ட இவர் ஜார்ஜியாவில் இருப்பதை அமெரிக்கா மோப்பம் பிடித்தது. பின்னர் அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜார்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது.
அமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமாகும் பட்சத்தில் அவருக்கு, 30 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.